அன்றாட செலவுகள்ல உலகத்திலேயே மிக விலையுயர்ந்த நாடாக சிங்கப்பூர் தான் இருக்காம்! கேட்கவே பயமா இருக்கா? பயப்பட வேண்டாம்! முதலில் இந்த ஆய்வுகள் எதையெல்லாம் அடிப்படையா வச்சு செய்யப்பட்டிருக்குனு பாப்போம்.
முதல்ல இது போன்ற ஆய்வுகள் உலக நாடுகள்ல உள்ள வரிவிதிப்பு முறைகள், வீடு விலை அல்லது வாடகை, தினசரி மார்க்கெட்டுகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருக்காது.
மாறாக 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் அதன் விலைகளைப் பொறுத்து தான் இது கணிக்கப்பட்டிருக்கு. அதுல கால்ஃப் விளையாட்டுத்தளத்தில் வசூலிக்கப்படும் Green Fees, உயர்தர உணவுகள், கார் மற்றும் காலநிலைகளுக்கு ஏற்றவாறு அணியப்படும் விதவிதமான உடைகள் என உயர்நிலை பொருட்கள் தான் அதிகம்!
பெரும்பான்மையான விலை பொருட்கள் ஷாப்பிங் (25%), போக்குவரத்து (19.5%) மற்றும் பொழுதுபோக்கு (18%) போன்ற பிரிவுகளை மையமாக வைத்து தான் இந்த புள்ளிவிவரம் கணக்கிடப்பட்டுள்ளது.
இங்க தான் நாம சில முக்கியமான விஷயங்களை கவனிக்கணும். இந்த புள்ளிவிவரத்தில் பல விளைபொருட்கள் சிங்கப்பூர் நாட்டின் அடிப்படை விலையில இருந்து மாறுபட்டு இருக்கு. பல பொருட்கள் மற்ற நாட்டுடன் ஒப்பிடும் பொழுது மாறுபட்ட விலையில இருக்கு. அதைப்பற்றிய ஒப்பீடுகள் இதோ!
முதல்ல இதுல தவற விட்ட காரியங்கள் குறித்து பாப்போம்!
- வரி : அனைத்து நாடுகளிலும் உள்ளது போலவே, சிங்கப்பூரில் பணிபுரியும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். இங்கு வசூலிக்கப்படும் வருமான வரி அவர்களின் வேலை முறைமையை பொருத்து அதிகபட்சம் 24%. வளர்ந்த நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளிநாட்டு பணியாளர்களுக்கு 30% வரியும், ஐக்கிய ராஜ்யமான UK- 45% வரியும் விதிக்கின்றன. இவற்றுடன் ஒப்பிடும்பொழுது சிங்கப்பூர் வருமான வரி தோராயமாக 50% வரை குறைவாகும்.
- இருப்பிடம்: சிங்கப்பூரில் வாழும் மக்கள் அவர்களின் தேவைக்கேற்ப வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக வாடகை வீடுகள் அது அமைந்துள்ள இடம் சுற்றி உள்ள வசதிகள் போன்றவற்றைப் பொருத்து மாறுபடும். நகரங்களில் அமைந்துள்ள வீடுகள் பொதுவாக அதிக வாடகை கொண்டதாகக் காணப்படும்.
மிக பிரபலமான மெரினா பே, டாங்லின் போன்ற இடங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகை மாதத்திற்கு 3,718 டாலர்கள் முதல் 11,100 டாலர்கள் வரை இருக்கும். ஆனால் சற்று நகரத்திலிருந்து விலகி புறநகர்ப் பகுதிக்குச் சென்றால் அனைவராலும் ஏற்கக் கூடிய விலையில் வீடுகள் உள்ளன.புறநகர்ப் பகுதியானாலும் சிங்கப்பூர் நாட்டின் மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதாக எங்கும் சென்று வரலாம். அது மட்டுமில்லாமல் தனியாக வேலைக்கு வரும் பல பணியாளர்களுக்கு வசதியாக பொது தங்குமிடங்களும் இங்கு உண்டு. சிங்கப்பூர் மிகவும் சிறிய நாடு என்பதால் நீங்கள் எங்கு தங்கி இருந்தாலும் 30 முதல் 45 நிமிடங்களுக்குள் எங்கும் சென்று வரலாம். எனவே அதிக பணம் கொடுத்து நகரங்களில் தங்காமல் சற்று தொலைவில் வசிப்பது குறைவான செலவில் முடிந்துவிடும்.
- போக்குவரத்து – நாம் எங்கு வாழ்ந்தாலும் நமக்கு தேவையான மற்றொரு அத்தியாவசியம் போக்குவரத்து. ஒரு நாட்டின் மிக பிரதானம். பொது போக்குவரத்து, தனிப்பட்ட போக்குவரத்து என இரு வகைகள் இதில் உண்டு. சிங்கப்பூர் பொறுத்தவரை கார் வாங்குவது மிகவும் காஸ்ட்லியான விஷயம் தான். இங்கு COE என்ற சான்றிதழ் பெற ஏறத்தாழ 75000 SGD செலவாகும். கார், எரிபொருள், காப்பீடு என எதையும் சேர்க்காமலே இவ்வளவு செலவாகிறது. காரின் விலையை விட அதிக அளவில் COE சான்றிதழுக்கு செலவாகிறது. எனவே சிங்கப்பூர் பொறுத்தவரையில் கார் வாங்குவது சற்று அதிகமான செலவை அளிக்கக்கூடியதாகும்.
ஆனாலும் சிங்கப்பூரில் சிறந்த பொது போக்குவரத்து அமைந்துள்ளதால் உங்களுக்கு கார் என்பது அவசியப்படாது. நகரம் முதல் கடைசி கிராமம் வரை எளிதாக இணைக்கக்கூடிய வகையில் சிறந்த முறையில் சிங்கப்பூரின் பொது போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது. ரயில், பேருந்து என பல விதமான பொது போக்குவரத்துகள் மிக குறைந்த செலவில் இங்கு அமைந்துள்ளது. எனவே இங்கு வாழும் மக்களுக்கு கார் என்பது அனாவசிய செலவு என்றே சொல்லலாம்.
ஒருவேளை அவசியப்பட்டாலும், எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் வாடகைக் கார்களும் இங்கு கிடைக்கும். அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய செலவில்! - மருத்துவம் – மருத்துவம் என்பது அனைவரது வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒரு தேவை. பணக்காரர் முதல் ஏழை வரை இந்த செலவுகளை யாராலும் தவிர்க்க இயலாது. அப்படியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்காக மலிவான மற்றும் சிறப்பான மருத்துவ வசதிகளை வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் அயல்நாட்டினராக இருந்தாலும், காப்பீடுகள் மூலமோ அல்லது உங்கள் நிறுவன காப்பீடுகள் மூலமோ இந்த செலவுகளை சமாளிக்க முடியும். அதற்காக சிறந்த காப்பீடு திட்டங்களையும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே மருத்துவத்தைக் குறித்த கவலையும் இங்கு அவசியமில்லை.
5. உணவு – மக்கள் அனைவருக்கும் முக்கியமான அத்தியாவசியம் உணவு தான். சிங்கப்பூர் பொறுத்தவரை அனைவருக்கும் ஏற்ற உணவுகளும் இங்கு எளிதாகக் கிடைக்கும். மிகக் குறைந்த செலவிலேயே அனைவரும் சாப்பிடக்கூடிய வகையில் Hawker Center எனப்படும் நூற்றுக்கணக்கான உணவு விடுதிகள் நாடு முழுவதும் அமைந்துள்ளது. இங்கு அனைவருக்கும் மலிவான விலையில் விதவிதமான உணவுகள் கிடைக்கும். அது தவிர பல ஆடம்பர உணவு விடுதிகளும் இங்கு அமைந்துள்ளது. அவரவர் பொருளாதார வசதிகளுக்கு ஏற்ற முறையில் உணவுகள் கிடைப்பதால், உணவுகளைக் குறித்தும் அதிக செலவுக்கான பயம் அவசியமில்லை.
இது போல பல அடிப்படைக்கும் சிங்கப்பூரில் மாற்று உண்டு. அனைத்து வித பொருளாதாரம் கொண்ட மக்களும் இங்கு அமைதியாய் வாழக்கூடிய வகையில் அத்தியாவசியங்கள் உள்ளன. உலகின் விலையுயர்ந்த நாடு சிங்கப்பூர் தான் ஆனாலும் அனைத்திற்கும் மாற்று இங்கு அமைந்துள்ளது. நீங்கள் எந்த வித பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும் உங்களுடைய தேவைகளை எளிதாக சந்திக்க இயலும்.