நம் ஊர்களில் பேருந்து ஓடி கொண்டிருக்கும் பொழுதே இறங்கிக் கொள்வதை இளைஞர்கள் ஸ்டைலாக கருதுவர். சிறு வயது முதலே சர்வ சாதாரணமாக இந்த சம்பவங்களை கண்டிருப்போம். ஆனால் கனடாவில் இதுவரை நடக்காத அதிர்ச்சி சம்பவமாக புறப்பட தயாராக இருந்த பிளைட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு ஒரு நபர் எகிரி குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவில் இருந்து துபாய்க்கு செல்லும் ‘ஏர் கனடா’ விமானத்தில் ஏறிய பயணிகள் அனைவரும் விமானம் புறப்பட தயாரானதால் சீட் பெல்ட் அணிந்து கொண்டு தயாராக இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு நபர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கொண்டு சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதனால் விமானப் பணி பெண்கள் மட்டுமல்லாமல் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போயினர். இதனால் சிறிது நேரம் விமானத்தில் பரபரப்பு நிலவியது. கீழே விழுந்த வாலிபருக்கு பலத்த அடி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபரைப் பற்றிய எந்த விவரமும் வெளியிடாத போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் துபாய் செல்ல வேண்டிய விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.