TamilSaaga

“உயிர்குடிக்க துடிக்கும் உருமாறிய அரக்கன்” : துளிர்விடுகிறதா “புதிய தலைவலி?”, Omicron என்பது என்ன? – சிறப்பு பார்வை

ஓமிக்ரோன் – பெயரைக் கேட்கும்போதே பீதியை கிளப்பும் கொரோனாவின் உருமாறிய நவீன வடிவம் இது. எப்போது என்ன செய்யப் போகிறதோ? வேகமாக பரவும் தன்னை கொண்டது…. விரைவில் பரவிவிடும் ! மீண்டும் ஒரு பேரழிவை உலகம் சந்திக்கப் போகிறது ! என எந்தப் பக்கம் திரும்பினாலும் இப்போது உலகம் பேசிக்கொண்டிருப்பது இந்த  ஓமிக்ரோன் பற்றிதான் !

அதெல்லாம் உண்மையா !?

அது என்ன  உருமாறிய வடிவம்!?

எங்கே தொடங்கி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது!?

இனிமேல் என்ன நடக்கப் போகிறது !?

 ஒரு தெளிவான பார்வை

இதையும் படியுங்கள் : “சாங்கி விமானநிலையம் வழியாக சென்ற இருவருக்கு Omicron உறுதி”

ஓமிக்ரோன் :  

2019 ம் ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த கரோனா எனும் தொற்றுநோய், வெறும் சளி காய்ச்சல் அறிகுறிகளோடு ஆரம்பித்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய ஒரு பெரும் தொற்றாக இன்றைக்கும் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பலப்பல உருமாற்றங்கள்,கொடூரமான பாதிப்புகள், எல்லாவற்றையும் எதிர்கொண்டு, தடுப்பூசி கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்த இந்த நேரத்தில், தனது வெறியாட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்து கிளம்பியிருக்கிறது கொரோனா!- அதன் பெயர்தான் ஓமிக்ரோன்!

கொரோனா  என்னும் கொடிய தொடரின் ஆரம்பம் சீனாவின் ஊகானில் தொடங்கியது என்றால், அதன் உருமாறிய இந்த உயிர்க்கொல்லி வடிவம் தென்னாப்பிரிக்காவிலிருந்து தனது கோர முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது.

ஓமிக்ரோன் –  கொரோனாவின் உருமாறிய வடிவம் !

தொடர்ந்து இந்த மாதிரி உருமாறிய வடிவம் எனும் வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். உருமாறிய வடிவம் என்றால் என்ன? அது வீரியம் அதிகமானதாக இருக்க காரணம் என்ன?

உயிரணுவியல்ரீதியாக பார்த்தால் இந்த கொரோனா வைரஸ் வேகமாக சடுதி–மாற்றமடையக்கூடிய ஒற்றை இழை ஆர்.என்.ஏ (Single Strand RNA) வைரஸாகும்.

இது Mutation எனப்படுகிறது.Mutation – ஒரு உயிரினம் தன்னுடைய மரபணுவை பிரதியெடுக்கும்போது உண்டாகும் தவறுகளில் இருந்து ஏற்படுகிறது.

மனிதயினத்தின் மரபணு ஒரு சதவீதம் பரிணாமமடைய 80 லட்சம் வருடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் விலங்குகளுக்கு இருக்கும் பல ஆர்.என்.ஏ வைரஸ்கள் ஒரு சதவீதம் பரிணாம மாற்றமடைய சில நாட்களே எடுத்துக்கொள்கின்றன. மற்ற பல வைரஸ்களை போலவே, கொரோனா வைரஸுக்கும் விலங்கினங்கள்தான் வாழ்கலனாக (reservoirs) இருக்கின்றன. இந்த வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி (through antigenic shift) மூலம் விலங்கினத்திலிருந்து மனிதயினத்துக்கு பரவும் நிகழ்ச்சிப் போக்கு சூனாசிஸ் (Zoonosis) எனப்படுகிறது.

அப்படி மாற்றமடையும் வைரஸ், பிறகு மேலும் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்–மனிதர் தொற்றாகவும் உருவாகலாம். இப்படி நடக்கும் போதுதான் கொள்ளை நோய்களோ (Epidemics), உலகளாவிய கொள்ளை நோய்களோ (Pandemics) உண்டாகின்றன. பரிணாமமடைந்த இந்த வைரஸ்களுக்கு எதிராக, குறிப்பான நோயெதிர்ப்பு அணுக்கள் மனிதர்களுக்கு இருக்காது என்பதால், வேகமாக பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதனால் தான் இந்த உருமாறிய வடிவங்கள் அதிக அச்சமூட்டுவதாக அமைகின்றன.

ஓமிக்ரோன் எங்கே தொடங்கியது ? காரணம் என்ன?

தற்போது பரவிக்கொண்டிருக்கிற,மற்ற கொரோனா வைரஸ்களில் இருந்து உருமாற்றம் அடைந்த இந்த புதிய வகை ஓமிக்ரோன் தொற்று, தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டு உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24 அன்று தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 26 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் WHO, இந்த ஓமிக்ரோனை  கவனத்தில் கொள்ள வேண்டிய தொற்றாக பிரகடனம் செய்தது. அதிலும் குறிப்பாக இதுவரை தடுப்பூசி அதிகம் போடாத நாடுகளுக்கு இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளது.

மற்ற நாடுகளோடு ஒப்பிடும் பொழுது தென்னாப்பிரிக்காவில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள். அங்கே இப்போதுதான் 45 வயதுக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் புதிதாக பரவி இருக்கிற இந்த ஓமிக்ரோன் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களைத்தான்  தாக்குகிறது . எனவே தடுப்பூசி போடாதவர்கள் இருக்கும் வரை கொரோனா பரவிக் கொண்டே தான் இருக்கும். அது பரவப் பரவ உருமாற்றம் அடைந்து கொண்டேதான் இருக்கும்!

ஓமிக்ரோன் – பெயர்க்காரணம் !

கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாறும் போதும், அதற்கு கிரேக்க அகர வரிசையில் உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்து வருகிறது.

ALPHA, BETA, GAMMA, DELTA என கிரேக்க அகர வார்த்தைகளில் உருமாறிய தொற்று பெயர் வைக்கப்பட்டது.

அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு, அகர வரிசையின் படி NU என்ற பெயரே வைக்கப்படும் என பேசப்பட்டது.

 எனினும், அதனை ஆங்கில வார்த்தையான NEW என உச்சரிக்கப்படும் என்பதால், அந்த பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து அகர வரிசையில் அடுத்ததாக உள்ள XI என்ற வார்த்தையும் புறக்கணிக்கப்பட்டு, 15வது கிரேக்க அகர வார்த்தையான ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது.

சீன ஜனாதிபதியின் பெயரும் XI என இருப்பதோடு, ஏற்கனவே சீனாவில் இருந்து தொற்று பரவியது என குற்றம்சாட்டப்பட்டு வருவதால், அந்த வார்த்தையை உலக சுகாதார நிறுவனம் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.. 

ஓமிக்ரோனும்

உலக நாடுகளும் !

இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவைப் அரிய வந்தவுடனேயே பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க ஆரம்பித்து விட்டன. ஏற்கனவே நிகழ்ந்தது போல மூன்றாவது அலைக்கும் பலியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.

இஸ்ரேல் , ஜப்பான் இருநாடுகளும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை விதித்து தங்கள் எல்லைகளை மூடி விட்டன.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் குளிர்காலமும் தொடங்கியுள்ளதை ஒட்டி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

செக் குடியரசு, எகிப்து, நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் மலாவி ஆகிய 5 நாடுகளுக்கும்  சுவிட்சர்லாந்து அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

ஓமிக்ரோன் இந்தியாவை பாதிக்குமா? பரவுமா?

இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா தொற்றின் முதல் அலையை, விட இரண்டாவது அலை  வீரியமானதாக இருந்து, முதல் அலையை விட அதிக எண்ணிக்கையிலான உயிர் பலிகளையும், பெரும் சேதங்களையும் ஏற்படுத்தியது.

தடுப்பூசி இயக்கம் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருப்பதால், சர்வதேச எல்லைகளைப் பொருத்தவரை இன்னும் கொஞ்சம் கவனமுடன் செயல்பட்டால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வு விழிப்புணர்வுடன் நடந்து கொண்டாலும், மூன்றாம் அலைக்கான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் கூட தடுப்பூசி போடாதவர்கள் இருக்கும் வரை, புதிய உருமாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதால் இது  அச்சத்திற்கு உரிய ஒன்றுதான். எனவே இந்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறிப்பாக தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடுமையான பரிசோதனைகளை  மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கள் சுயவிவர படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

RT- PCR கொரோனா சோதனை அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மேலும் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

ஓமிக்ரோன் அறிகுறிகள்,  தன்மை, வீரியம், விளைவுகள்:

ஓமிக்ரோன் தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் விரைவில் வீரியமாக பரவக்கூடியது என்று தெரிய பட்டாலும் இதுவரை அதிகாரப்பூர்வமான இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

அறிகுறிகள் எனும்பொழுது, கொரானாவைப் போல வாசனை இழப்பு, சுவையை அறியாமல் போதல், போன்ற அளவிற்கான அறிகுறிகள் ஏற்படாது. சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு, போன்றவை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே, வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு குணம் அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன – என்றாலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஓமிக்ரோன் பரவல் பட்டியலில் இருக்கும்

நாடுகள் :

போட்ஸ்வானா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன், இஸ்ரேல், பெல்ஜியம், கனடா போன்ற நாடுகள் தங்களது நாட்டில் குறிப்பிட்டவர்களுக்கு, தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு பயணம் செய்தவர்களுக்கு, இருக்கலாம் என்னும் சந்தேகத்தை வெளியிட்டிருக்கின்றன. பலர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு இருக்கின்றனர், என்றாலும் முழுமையாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

ஓமிக்ரோனும் சிங்கப்பூரும் !

ஓமிக்ரோன் பரவலை சிங்கப்பூர் மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் லீ அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்து வந்த இரண்டு பயணிகளுக்கு ஓமிக்ரோன் இருப்பதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட மறுத்த சுகாதார அமைச்சகம் அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. வீரியமான அறிகுறிகளும் இதுவரை இறப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் கூட, ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்தும், பெற்ற அனுபவங்களிலிருந்தும், உலக மக்கள் மத்தியில் இந்த ஓமிக்ரோன் ஒரு பீதியை கிளப்பி இருக்கிறது என்பதும், ஒரு மரண பயத்தை உண்டாக்கி இருப்பதும் உண்மைதான். அதேசமயம் அரசுகளும் மிக வேகமாக ஆரம்பத்திலேயே இதன் பரவலை தடுக்கும் நோக்குடன் செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

எனவே இப்போது நீங்கள் இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் நேரம் வரை நமக்கு ,  இரண்டாவது அலையை விட பெரிய பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, என்றாலும் தனிநபர் ஒவ்வொருவரின் சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள்தான் உண்மையான தடுப்பாக அமைய முடியும் என்பதை கருத்தில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் செயல்படும்போது கண்டிப்பாக இந்த மூன்றாவது அலை  கட்டுக்குள் வரும் எனும் நம்பிக்கையோடு எதிர் நோக்குவோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts