சிங்கப்பூரில் நம் தமிழர்கள் வழிபடும் பிரசித்தி பெற்ற கோயில் செராங்கூன் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆகும். அந்த கோவிலில் வருடந்தோறும் நடக்கும் தீமிதி திருவிழாவானது சிங்கப்பூர் முழுவதும் புகழ்பெற்றதாகும். ஏராளமான தமிழ் மக்கள் தீ மிதிப்பதை காண சிங்கப்பூர் மக்களும் கூடி நிற்பார்கள்.இந்நிலையில் தீமிதி திருவிழாவிற்கான இணைய வழிப் பதிவு வருகின்ற செப்டம்பர் 25 திங்கட்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறவிருப்பதை ஒட்டி எந்த நேர்த்திக்கடனுக்கும் நேரடியாக பதிவு செய்த முடியாது எனவும் இணையதளம் வழியாகவே பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்த பின் அதனை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு எஸ் எம் எஸ் அல்லது ஈமெயில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவிற்கான கட்டணங்களும் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பக்தர்கள் கீழ்கண்ட https://heb.org.sg/fw2023/ இணையதளம் மூலம் புக் செய்யலாம் என்றும் நவம்பர் 4 ஆம் தேதி வரை பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பதிவினை உறுதி செய்வதற்கு முன்பாக நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்றவற்றை கவனமாக வாசித்த பின்பு உறுதி செய்யுமாறு இந்து அறக்கட்டளை வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது, பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் செல்லும்போது எஸ் எம் எஸ் ஐ அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர பால்குடம் எடுத்தல், அங்க பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனே செலுத்துவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே கோவிலுக்குள் இருக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான பால்குடம், மாவிளக்கு போன்றவற்றை கோவில் நிர்வாகமே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். தீமிதி திருவிழாவானது நேரலையில் காண்பிக்கப்படும் என்பதால் நேரடியாக வர முடியாத பக்தர்கள் நேரலையில் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 62234064 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.