இன்றைய சூழலில் உலகின் மிக பிஸியான ஏர்போர்ட்டில் ஒன்றாக வலம் வருகிறது சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட். உலகம் முழுவதும் பலதரப்பட்ட பயணிகளை தினம் தினம் வரவேற்று கையாள்கிறது.
பொதுவாக, ஒரு நாட்டில் இருந்து தொலை தூரத்தில் உள்ள இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டுமெனில், ஒரே விமானத்தில் பயணிப்பது கடினமானது. அப்படி, பெரும்பாலும் ஒரே ஃபிளைட் இயக்கப்படுவதும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில், பயணிகள் வேறொரு நாட்டில் உள்ள விமான நிலையத்தில் இறங்கி வேறொரு விமானத்தை பிடித்தாக வேண்டும்.
அப்படிப்பட்ட Transit Traveler பயணிகளுக்கு என்று இருக்கும் டூர் ஆப்ஷனை சாங்கி ஏர்போர்ட் மீண்டும் துவங்கியுள்ளது. அதாவது, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் அந்த பயணிகள் வேறொரு விமானத்துக்காக 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த 6 மணி நேரமும் அவர் ஏர்போர்ட்டில் இருப்பதற்கு பதில், அவருக்கு சிங்கப்பூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சுற்றிக் காண்பிக்கப்படும்.
இது ஏதோ ஒரு புதிய அறிவிப்பு என்று நினைத்துவிட வேண்டாம். 1987ம் ஆண்டு முதலே சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கவும், சிங்கப்பூரை முக்கிய சுற்றுலா தலமாக மாற்றும் ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் துவங்கப்பட்டுவிட்டது. இடையில், கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
எப்படி அப்ளை செய்வது?
சாங்கி ஏர்போர்ட்டின் வெப்சைட்டில் இதற்கான முன்பதிவு வசதி கிடைக்கிறது. குறைந்தபட்சம் 5.5 மணிநேரம் முதல் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் சாங்கி ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகள் அனைவரும் இந்த இலவச சிங்கப்பூர் பயணத்தில் சேர முடியும். மேலும் இதில் பங்கேற்க, பயணிகள் செல்லுபடியாகும் Entry Visa பெற்றிருந்தால் போதுமானது.