சிங்கப்பூருக்கு செல்ல ஆசையாக கிளம்பிய 5 வயது குழந்தை விபத்தில் சிக்கி பலியான சோகம் பலரிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வாழ்க்கை எல்லாருக்குமே என்னவிதமான விஷயங்களை வைத்திருக்கிறது என யாராலையுமே சொல்ல முடியாது என்பதற்கு சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த விபத்து ஒன்று எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வா என்பவரின் மனைவி மகேஸ்வரி தனது 5 வயது மகள் சாருநேத்ரா மற்றும் உறவினர் ரஞ்சித்குமார் ஆகியோருடன் சிங்கப்பூர் வருவதற்கு கிளம்பி இருக்கிறார்.
விமான நிலையம் செல்ல காரில் கிளம்பியவர்களை வழியனுப்ப உறவினர்கள் இருவர் கூட வந்திருந்திருக்கின்றனர். கார் மிதமான வேகத்தில் சென்று இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருச்சியை நெருங்கிய சமயத்தில் தான் விபரீதமாகி இருக்கிறது.
அதாவது, திருச்சியில் இருந்து வந்த டிப்பர் லாரி திடீரென வலதுபுறமாக திரும்பி சாலையின் குறுக்கே கடந்து இருக்கிறது. இதனை எதிர்பாராத கார் டிரைவர் எப்படியாவது வண்டியை நிறுத்த முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் கார் வேகமாக லாரி மீது மோதியதை தவிர்க்க முடியவில்லை.
விபத்தில் சிக்கிய இடத்திலேயே காரில் இருந்த ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இவரை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சையில் இருந்த 5 வயதான சாருநேத்ரா பலனிக்காமல் உயிரிழந்தார். மற்றவர்கள் இன்னும் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.