SINGAPORE: சிங்கப்பூரின் Block 840 Tampines Street 82-ல் பெண் ஒருவர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு நேற்று (செப்.19) மாலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 53 வயதான பெண் ஒருவர் Tampines பகுதியில் St Hilda’s Secondary School வாசலில் கத்தியுடன் நின்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பச்சை நிறத்தில் மேலாடையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்த அந்த பெண், தன்னுடைய இடுப்பைச் சிகப்பு நிற பை ஒன்றையும் கட்டியிருந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த 10 போலீசார், அப்பெண்ணை கையில் துப்பாக்கியுடன் சுற்றி வளைத்தனர். அதில், மூன்று அதிகாரிகள் sub-machine guns எனப்படும் அதிநவீன துப்பாக்கியை வைத்திருந்தனர்.
அந்த பெண் அதிகாரிகளிடம் ஆங்கிலமும் மலாய் மொழியும் கலந்து பேசியும், கூச்சலிட்டும் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அப்பெண் தனது இடது கையால் யாருக்கோ தொலைபேசியில் பேச முயன்ற போது, வலது கையிலிருந்து அவர் வைத்திருந்த ஆயுதம் கீழே விழுந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார், அப்பெண்ணை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அப்பெண் தனது கத்தியால், தன்னைத் தானே வயிற்றுப்பகுதியில் குத்திக் கொண்டார். பிறகு உடனடியாக அப்பெண் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் தொடர்பான குற்றம் மற்றும் பொது இடத்தில் ஆயுதம் வைத்து மிரட்டியது தொடர்பான குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.