இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது பயிற்சி விமானி, ஒரு கொசு நெற்றியில் கடித்ததால், மூளையில் தொற்று ஏற்பட்டு அகால மரணம் அடைந்திருக்கிறார்.
இங்கிலாந்தின் Suffolk-ல் உள்ள Bury St Edmunds பகுதியைச் சேர்ந்தவர் ஒரியானா பெப்பர் (Oriana Pepper). இவருக்கு விமானங்களை இயக்க வேண்டும் என்பதே கனவு, லட்சியம் எல்லாம். பைலட் ஆக வேண்டும் என்பதற்காக Oxford பல்கலைக்கழகத்தில் EasyJet programme-ல் தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து, பைலட் பயிற்சிக்காக அவர் பெல்ஜியத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவரை ஒரு கொசு கடித்ததாக ‘ The Independent‘ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, Oriana Pepper-ன் நெற்றியில் ஒரு கொசு கடித்த நிலையில், ஜூலை 7, 2021 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனினும், அதன் பிறகு தொற்று தீவிரமாக பரவியிருக்கிறது.
மருத்துவர்கள் எவ்வளவோ எதிர்ப்புசக்தி மருந்துகளை கொடுத்தும், அவை பலனளிக்கவில்லை.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அப்பெண்ணை மீண்டும் அவரது காதலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், எந்தவித சிகிச்சையும் பலனின்றி, ஜூலை 21, 2021 அன்று மருத்துவமனையில் காதலன் கண்முன்னே பெப்பர் உயிரிழந்தார்.
இதுகுறித்த ‘The Independent’ செய்தி நிறுவன தகவலின் படி, அப்பெண் நெற்றியில் ஒரு கொசு கடித்ததால் ஏற்பட்ட கடுமையான தொற்று காரணமாக இறந்தார் என்று Suffolks-ன் மூத்த விசாரணை அதிகாரி Nigel Parsley உறுதி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி Parsley கூறுகையில், “ஒரியானாவின் நெற்றியில் கொசு ஒன்று கடித்ததைத் தொடர்ந்து, ஒருவகை தொற்று ஒரியானாவின் தோலில் நுழைந்துள்ளது. அது பின்னர் கழுத்தின் கரோடிட் தமனிக்குள் சென்று அப்பெண்ணின் மூளையில் ‘செப்டிக் எம்போலி’க்கு வழிவகுத்தது” என்றார்.
அது என்ன செப்டிக் எம்போலி (septic emboli)?
இது ‘Septic embolism’ என்று அழைக்கப்படுகிறது. Septic embolism என்பதன் அர்த்தம் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதைக் குறிப்பதாகும். விசாரணை அதிகாரி Parsley கூற்றின் படி, அப்பெண்ணின் மூளையில் இந்த தொற்று இரத்தப் போக்கை தடுத்ததால், அவர் உயிரிழந்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.
அதுமட்டுமின்றி, “எனது இத்தனை ஆண்டுகால பணியில், கொசு நெற்றியில் கடித்து, அதனால் ஒரு தொற்று ஏற்பட்டு, மூலையில் இரத்தம் தடைப்பட்டு ஒருவர் இறந்ததாக நான் பார்த்ததுமில்லை.. கேள்விப்பட்டதுமில்லை” அவர் தெரிவித்துள்ளார்.
பெப்பரின் பெற்றோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனது தந்தை மற்றும் சகோதரரை விமானத்தில் உட்காரவைத்து, தானே இயக்கி அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவளது வாழ்வின் உச்சக்கட்ட விருப்பமாக இருந்தது.
சமீபத்தில் கூட, தன் மனதுக்கு பிடித்த நபரை பயிற்சியின் போது கண்டறிந்ததாகவும், தனது கனவுகள் அனைத்தும் விரைவில் நடக்கப் போகிறது என்றும் அவர் மகிழ்ச்சியில் இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அனைத்து ஆசைகளும் நிராசையாக தன் உயிரை பறிகொடுத்திருக்கிறார் இந்த இளம் பெண்.