சக ஊழியரை கத்தியால் குத்திய வெளிநாட்டு தொழிலாளருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவரையொருவர் விளையாட்டுத்தனமாக தாக்கிக் கொண்டு விளையாடுவது என்பது குழந்தைகள் விளையாடி பார்த்திருப்போம். அப்போது கூட பெற்றோர்கள் அதனை கண்டிப்பார்கள்.
இதே விளையாட்டை இரண்டு ஊழியர்கள் விளையாடினால்? அதுவும் வேலைக்காக சொந்த ஊரில் இருந்து கிளம்பி வேறு நாட்டுக்கு சென்று, அங்கு பொறுப்பில்லாமல் இதுபோன்று விளையாடினால்….? அப்படியொரு சம்பவம் தான் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர் Hossen Md Midul. இவர் CDPL துவாஸ் Dormitory-யில் தங்கியிருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 12 அன்று இரவு 7.30 மணியளவில் Dormitory-யில் தனது அறையில் தங்கியிருந்த சக ஊழியருடன் ‘சண்டை விளையாட்டில்’ ஈடுபட்டிருக்கிறார். அதாவது ஒருவரையொருவர் ஜாலியாக அடித்துக் கொள்வது தான் அந்த விளையாட்டின் ரூல்ஸாம்.
ஒருக்கட்டத்தில் இந்த அடிதடி விளையாட்டு சீரியஸான அடிதடியாக இருவருக்கிடையே உருமாற, அதே அறையில் தங்கியிருந்த மற்ற 5 வெளிநாட்டு ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். இந்த மோதலால் கடும் ஆத்திரமடைந்த Hossen Md Midul அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்திருக்கிறார்.
பிறகு, ஜன.13 அன்று அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில், சமையலறையில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்த Hossen, வயிற்றின் இடது பக்கத்தில் ஓங்கி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து Dormitory-யில் ஒளிந்திருந்த Hossen-ஐ கைது செய்தனர்.
பாதிக்கப்பட்டவரின் சிறுகுடலின் ஒரு பகுதியை அகற்றி, மீதமுள்ள பகுதிகளை மீண்டும் ஒன்றாக இணைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு 28 நாட்கள் மருத்துவமனை விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தோழரை தானாக முன்வந்து காயப்படுத்தியதாக ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இன்று (ஜூன்.21) சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர்கள் இருவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.