சிங்கப்பூரில் மனிதக் கடத்தல் தடுப்புச் சட்டம் 2014ன் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளுக்காக 47 வயது நபருக்கு 3 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறைத்தண்டனையும், S$27,365 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று செவ்வாய்கிழமை (ஏப்ரல்19) தெரிவித்துள்ளது. .
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அழகர் பாலசுப்ரமணியன் என்பவர் 2,722 சிங்கப்பூர் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 46 டன்லப் தெருவில் இருந்த ஒரு பொழுதுபோக்கு நிறுவனமான ஜெய்ஹோ கிளப்பின் இயக்க மேலாளராக அவர் பணிபுரிந்தது தொடர்பான தொழிலாளர் கடத்தல் குற்றங்களுக்காக அவர் கடந்த பிப்ரவரி 21 அன்று நீதிமன்றத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிய அந்த அபராதத்தை செலுத்த தவறினால் பாலசுப்பிரமணியன் மேலும் 20 வாரங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தெரிவித்த இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் மேலும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 2016ல் இந்த வழக்கு குறித்து MOMக்கு முதன்முதலில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் பாலசுப்ரமணியன் ஜெய்ஹோ கிளப்பில் வேலைகளைச் செய்வதற்காக பெண் பணி அனுமதி வைத்திருப்பவர்களை நேர்காணல் செய்து பணியமர்த்தியுள்ளார்.
“சிங்கப்பூரில் நுழைவதற்கு முன்பு, வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு முழுமையாக விளக்கப்படாத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்” என்று MOM ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
ஒரு காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட அந்த 3 இந்திய பெண்களுக்கு சம்பளம் கொடுக்காமலும், உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் பல கொடுமைகளை செய்துள்ளார் அந்த நபர். இறுதியில் MOMக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில் MOM உரிய நடவடிக்கைகளை எடுத்து அந்த பெண்களை மீட்டுள்ளது.
தற்போது அந்த பெண்கள் மீண்டும் இந்தியா அனுப்பப்பட்டுள்ளனர், சிங்கப்பூர் நிரந்தரவாசியான பாலசுப்ரமணியனுக்கு 3 ஆண்டுகள் மற்றும் 5 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.