வெளிநாட்டு வாழ்கை, குறிப்பாக சிங்கப்பூர் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை பல கட்டுரைகளில் நாம் தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம். தமிழகம் உள்பட பல நகரங்கள் மற்றும் நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு. அந்த வகையில் இந்த பதிவில் “ஏக்கத்தின்” தூண்டுதலால் சிங்கப்பூர் வந்து சுமார் 18 ஆண்டுகளாக இங்கு உழைத்து வரும் ஒரு மிகச்சிறந்த தமிழரை பற்றித்தான் காணவுள்ளோம்.
முதலில் இன்று (April 8) தனது 10ம் ஆண்டு திருமணநாளை கொண்டாடும் பிரபாகரன் அவர்களுக்கும் அவரது மனைவி கீதாவிற்கும் நமது தமிழ் சாகா வாசகர்கள் சார்பாக நமது உளம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்.
இந்த பதிவின் நாயகன் பிரபாகரன் அவர்கள் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியினை தற்போது காணலாம். “வணக்கம், எனக்கு சொந்த ஊர் தாயனூர், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சரியாக சொன்னால் செஞ்சி அருகில் உள்ள மிகச்சிறிய கிராமம். வீட்டில் ரொம்ப வசதி கிடையாது, அப்பா விவசாயம், அம்மா வீட்டு நிர்வாகம். நானும் அப்பாவுடன் இணைந்து விவசாய தொழில் தான் செய்து வந்தேன், படித்ததும் 10th வரை தான்.
அன்றைய தேதியில் எனது சகோதரர்கள் பலர் வெளிநாட்டில் குறிப்பாக சிங்கப்பூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். விடுமுறைக்கு வருகை தரும் அவர்களை பார்க்கும்போதும், அவர்களுடைய வாழ்கை குறித்து கேட்டறியும்போதும் ஒரு சிறு “ஏக்கம் தோன்றியது”. சத்தியமாக சொல்கின்றேன் அது ஏக்கம் மட்டுமே அன்றி அவர்கள் மீது நான் ஒருபோதும் பொறாமைகொண்டதில்லை. எனக்கு ஒரே தங்கை, அவர்களுக்கு திருமண செய்யவேண்டும். நல்ல முறையில் ஒரு வீடுகட்டவேண்டும் இவ்வளவு தான் என் ஆசையாக இருந்தது.
10th படித்து முடித்தேன், வீட்டில் அப்பாவுடன் விவசாயம் செய்தேன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை சென்று கொத்தனார் வேலை செய்வேன். அந்த காலகட்டத்தில் 50 ரூபாய் 60 ரூபாய் தான் ஒரு நாள் சம்பளம். காலம் நகர்ந்தது, ஒரு கட்டத்தில் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு அண்ணனிடம் “அண்ணே 10th முடித்துவிட்டேன் அடுத்து என்ன பண்ணலாம் என்று கேட்க”, ITI படிச்சுக்கடா என்று அவர் கூற, உடனே ITI Mechanical சேர்ந்து படித்து நல்ல முறையில் தேர்ச்சியும் பெற்றேன். மீண்டும் அவரை தொடர்புகொண்டு ITI முடிச்சுட்டேன் சிங்கப்பூருக்கு வேலை வர வேறு என்ன செய்யவேண்டும் என்று கேட்க, “ITI படிச்சுட்டு உனக்கு சிங்கப்பூர் வேலை வேணுமா? என்ற அவருடைய அந்த ஏளன பேச்சு என்னை நிலைகுலையவைத்தது”.
அன்று என் குடும்பம் இருந்த சூழ்நிலையில் எப்போது நான் வேலைக்கு செல்லவேன் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. வீட்டுக்கு மூத்தப்பிள்ளை, அதிலும் ஒரு தங்கை உள்ள ஆண் பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். எனக்கு அதே ஆசை தான், குறிப்பாக இவ்வளவு கஷ்டத்திலும் என்னை இவ்வளவு தூரம் படிக்கவைத்தவர்களுக்கு நான் வேறு என்ன கைமாறு செய்யமுடியும்.
இந்த இக்கட்டான சூழலில் தான் Skilled Test பற்றி கேள்விப்பட்டேன், உடனே கொஞ்சம் பணம் சேர்ந்துகொண்டு சென்னை நோக்கி மீண்டும் ஓடினேன். Rotary என்ற நிறுவனம் மூலம் இரண்டு Skilled Test முடித்தேன். முடித்த உடனே எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு தான் சிங்கப்பூரில் உள்ள Rotaryயில் Pipe Fitter வேலை. சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தா போதும் என்ற மனநிலையில் சிங்கப்பூர் வந்திறங்கினேன். அப்போது எனக்கு ஒரு நாள் சம்பளம் 18 வெள்ளி, தங்கை கல்யாணம், சிங்கப்பூருக்கு வருவதற்கு வாங்கிய கடன், புது வீடு என்று மிகப்பெரிய நிதிச் சுமையை தாங்கியே சிங்கப்பூர் வந்தேன்.
ஆனால் இவ்வளவு பெரிய பாரத்தை நான் எப்படி தாங்குவேன், எனக்கு கிடைப்பதோ மாதம் 430 வெள்ளி இதில் எப்படி கரைசேர போகிறேன், என் வீட்டை எப்படி கரைசேர்க்கப்போகிறேன் என்று பயந்தேன். சிங்கப்பூரில் நீங்கள் Part Time வேலையும் செல்லமுடியாது, அப்போது தான் வரும் சம்பளத்தில் துளி கூட வீணாக்காமல் ஒரு பகுதியை வீட்டிற்கும் மற்றொரு பகுதியை இங்கு மேலும் சில Safety Skilled பயிற்சிகள் கற்றுக்கொள்ளவும் முடிவுசெய்தேன். எண்ணிபடியே அனைத்தையும் ஒரு வைராக்கியத்துடன் கற்று முடித்தேன்.
Safety Skill, Forklift என்று எனது வேலை சம்மந்தமாக உள்ள அனைத்து Courseகளையும் முடித்தேன். சுமார் 8 ஆண்டுகள் எங்குமே நகரவில்லை, Rotary Engineering நிறுவனத்தில் அயராது பாடுபட்டேன். 8 ஆண்டுகள் கழித்து வேறு நிறுவனம் ஒன்றில் Mechanical Supervisor வேலை ஒன்று கிடைத்தது, வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொண்டேன். அது ஒரு Contract நிறுவனம் தான் இருப்பினும் சம்பளம் கொஞ்சம் அதிகம் ஆதலால் சுமார் 4 ஆண்டுகள் அங்கும் நல்ல முறையில் பணிசெய்தேன்.
இறுதியில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது நான் வேலை பார்க்கும் சிங்கப்பூர் நிறுவனத்தில் Process Technician பதவியில் பணி செய்து வருகின்றேன். எதை நம்பி சிங்கப்பூருக்கு வந்தேனோ அதை செய்து முடித்துவிட்டேன் என்ற மனநிறைவு உள்ளது. நல்ல சம்பளம், சொந்த ஊரில் எங்களுக்கு என்று இடங்கள், தங்கைக்கு சிறப்பான முறையில் திருமணம், எனக்கு நல்ல முறையில் திருமணம் என்று வாழ்க்கை நிம்மதியாக நகர்கின்றது. இந்த 18 ஆண்டுகள் நான் பட்ட கஷ்டத்தை சிங்கப்பூர் மாற்றிவிட்டது.
சிங்கப்பூரை நம்பி முறையாக வந்த எவரும் வீண்போனதாக சரித்திரமே இல்லை, அவர்களுடைய தவிறினாலோ, அல்லது தவறான வழிகாட்டல் மூலம் தான் பலர் பாதைமாறி போகின்றனர். ஒருத்தர் நல்ல படிப்புடன் இங்கு வரவில்லை என்றாலும் இங்குள்ள நிறுவனங்கள் அவர்களை எப்படியாவது முன்னேற்றத்தான் பார்ப்பார்கள். இன்று என் சொந்த ஊரில் நான் நல்ல பேரோடு இருக்கின்றேன் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த சிங்கப்பூர் தான். என் உழைப்பை மட்டுமே நம்பினேன், சிங்கப்பூர் எனக்கு தனி அடையாளமே கொடுத்துவிட்டது.
கற்றுக்கொள் தயங்கியதில்லை, தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளேன், 3 நிறுவனங்கள் மாறிவிட்டேன் ஆனால் எந்த முதலாளியும் என்னை குறை கூறியதில்லை. நான் புதிதாக வரும் என்னை போன்ற தொழிலாளிகளுக்கு சொல்வது ஒன்றுதான், சம்பளம் குறைவு என்று நினைக்கவேண்டாம், இருப்பதை கொண்டு நிறைய படியுங்கள், சிங்கப்பூரில் அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. இன்று சம்பளம் குறைவாக இருக்கலாம் ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் நீங்கள் உச்சாணிக்கொம்பில் நிற்கும்போது பட்ட வலியெல்லாம் நொடியில் தீர்ந்துபோகும்.
உழைக்க பயப்பட வேண்டாம், போராடுங்கள் சிங்கப்பூர் உங்களை அரவணைக்கும் என்று முடித்தார் பிரபாகரன். சுமார் 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி இன்று மனைவி கீதா மற்றும் மகள் Gorokshana ஆகியோருடன் ஒரு சிறப்பான வாழ்க்கையை, வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார் பிரபாகரன். ஆனால் இவை அனைத்து ஒரே நாளில் நடந்துவிடவில்லை. எனவே பிரபாகரன் போல காத்திருப்போம், உரிய தகுதியோடு போராடுவோம், வாழ்க்கையில் வெற்றிபெறுவோம். மீண்டும் ஒரு முறை பிரபாகரன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.