தற்போதெல்லாம் கல்லூரில் செல்லும் மாணவ மாணவிகளை விட பள்ளிக்கு செல்லும் இளசுகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்று தான் கூறவேண்டும். பள்ளி பருவத்திலேயே காதல், கல்வி நிலைய வளாகத்திற்குள்ளேயே போதை பொருள் உட்கொள்ளுதல் என்று தொடங்கி அறிவை கற்பிக்கும் ஆசானிடம் ஆயுத்தங்களை காட்டும் அவலம் வரை பல கொடுமையான விஷயங்கள் அரங்கேறிவருகின்றன.
இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இப்பொது இணையத்தை காட்டுத்தீயாக பரவி வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் என்ற ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த மூன்று மாணவிகள் பேருந்துக்குள் பீர் குடிக்கும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
பீர் குடிச்ச வாசனை வருமாடி என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு ஓடும் பேருந்துக்குள் மூன்று மாணவிகள் அந்த ஒரு பீர் பாட்டிலை மாற்றி மாற்றி குடிக்கின்றனர். இந்நிலையில் இந்த விஷயம் வைரலானதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு அப்பகுதி போலீசார் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் சென்றுள்ளார்கள். அந்த மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியது ஒருபுறம் இருக்க முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்த இந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்குமாறு அப்பள்ளிக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்று உலகாளும் நிலைக்கு உயர்ந்து நிற்க இதுபோன்று செயல்படும் சில மாணவர்களால் ஒட்டுமொத்த அரசு பள்ளிகளுக்கே அவமானம் ஏற்படுகிறது என்று கூறினால் அது மிகையல்ல. மாணவர்களை பெற்றோர்கள் தங்கள் ஊரில் உள்ள பள்ளிகளில் படிக்கவைப்பதன் மூலம் இது போன்ற தவறுகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். சொந்த ஊரில் படிக்கும்போது, தாய் தந்தை சொந்த பந்தங்கள் அருகிலேயே இருப்பதால் மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடாமல் நல்ல முறையில் படிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.