சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) இரண்டு மணி நேரமாக கவனிக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலேயே இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“மீ போக் தாஹ்” என்று அழைக்கப்படும் அந்த பெண்ணின் கணவர் வெளியிட்ட முகநூல் பதிவில், “கடந்த மார்ச் 15ம் தேதி இரவு 9:30 மணியளவில் எனது மனைவி குளித்துக் கொண்டிருக்கும்போது அவரது பிறப்புறுப்பு வழியாக அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போது எனது மனைவி அவருடைய பேறுகாலத்தின் 36வது மாதத்தில் இருந்தார்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரது பதிவில், ரத்தப்போக்கு அதிகமானதும் உடனடியாக 995க்கு அழைப்பு விடுத்த அந்த பெண்ணின் கணவர், துணை மருத்துவர்கள் 10 நிமிடங்களில் தனது வீட்டை அடைந்ததாகவும் கூறியுள்ளார். இறுதியாக இரவு 10:30 மணியளவில் அவரது மனைவி NUHன் A&E துறைக்கு வந்து சேர்ந்துள்ளார். அந்த கணவரின் கூற்றுப்படி, அவரது மனைவி A&Eக்கு வந்தவுடன், பணியில் இருந்த ஒரு செவிலியர் அவரது மனைவியின் Vitalsஐ சரிபார்க்க கண்காணிப்பு சாதனத்தை பொறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “என் செல்லமே… எங்களை மன்னித்துவிடு. உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்ள தவறிவிட்டோம். உன்னை தொட்டுப்பார்க்க கூட முடியாத நிலைக்கு சென்றுவிட்டோம். சொர்க்கத்தில் நீ ஒரு நல்ல பையனாக இருப்பாய் என்று நம்புகிறோம். உன்னை எப்போதும் அப்பாவும், அம்மாவும் நினைத்துக் கொண்டே இருப்போம். உன்னை அவ்வளவு நேசிக்கிறோம். எங்கள் இதயத்தில் நீ எப்போதும் இருப்பாய்” என்று குறிப்பிட்டுள்ளது காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.
அதேநேரம், அவர் தனது மனைவியை கவனிக்க ஊழியர்களுக்கு ஏன் இவ்வளவு நேரம் எடுத்தது? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இறந்த அந்த சிசு மார்ச் 16ம் தேதி (Mandai Crematorium) மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் அந்த சிசுவின் அஸ்தி தற்போது கடலில் கரைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து NUH விசாரணை நடத்தி வருகின்றது, மேலும் இதுகுறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் NUH தெரிவித்துள்ளது.