TamilSaaga

“சார்ஜ் போட மறந்துட்டேன்”னு இனி சொல்ல முடியாது! சீன நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு – அதிசய Mobile பேட்டரி

ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் போன்ற சாதனங்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய ஒரு அதிசய பேட்டரியை சீனாவைச் சேர்ந்த பீட்டாவோல்ட் (Betavolt) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது உலகின் முதல் மினியேட்டரைஸ் செய்யப்பட்ட அணுசக்தி அமைப்பு (World’s First Miniaturized Atomic Energy System) என்று புகழப்படுகிறது.

பேட்டரியின் சிறப்பு அம்சங்கள்:

இந்த அணுக்கரு மின்கலம் (Nuclear Battery) நிக்கல்-63 என்ற கதிரியக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக, இது கதிர்வீச்சு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் அளவு ஒரு நாணயத்தை விட சிறியதாக இருந்தாலும், செல்போன்கள், டிரோன்கள், பேஸ்மேக்கர்கள், சென்சார்கள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு சக்தி வழங்கும் திறன் கொண்டது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

பீட்டாவோல்ட் நிறுவனத்தின் தகவலின்படி, இந்த பேட்டரி 100 மைக்ரோவாட் ஆற்றலையும், 3 வோல்ட் மின்னழுத்தத்தையும் உற்பத்தி செய்யும். மிக முக்கியமாக, 50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யாமலோ அல்லது பராமரிப்பு இல்லாமலோ தொடர்ந்து நிலையான மின்சாரத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களுக்கு பேட்டரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பேட்டரி பழுதடைந்தால் அல்லது அதிகம் பயன்படுத்தப்பட்டால் சார்ஜ் விரைவாக குறைந்துவிடும். பொதுவாக ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். சிலர் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பவர் பேங்குகள் அறிமுகமானாலும், நெடுந்தூர பயணங்களில் அல்லது மின்சார வசதி இல்லாத இடங்களில் அவையும் பயனற்று போகின்றன.

இத்தகைய சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக இந்த அணுக்கரு பேட்டரி அமையும் என பீட்டாவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அணுசக்தியைப் பயன்படுத்தி அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், எதிர்காலத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை முற்றிலும் மாற்றியமைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

பீட்டாவோல்ட் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி, பல பேட்டரிகளை இணைத்து பெரிய சாதனங்களுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை வகுத்து வருகிறது. இது வெற்றியடைந்தால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிரோன்கள் போன்றவை ஒருமுறை சார்ஜ் செய்தால் பல ஆண்டுகள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் விவரங்களுக்கு பீட்டாவோல்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

Related posts