காதலித்து, பின் பெற்றோர் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றன ஆயிரக்கணக்கான ஜோடிகள் இங்கு உண்டு. அதை போலத்தான் தங்களது திருமண வாழ்க்கையை பல்லாயிரம் கனவுகளோடு துவங்கியுள்ளனர் விஜய குமார் மற்றும் பிரதீபா என்ற காதல் ஜோடி.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய குமார் அதே பகுதியில் வசிக்கும் பிரதீபா என்ற பெண்ணை ஒருதலைப்பட்சமாக காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரதீபாவும் குமாரின் காதலை ஏற்க திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் இருவீட்டாரும் அதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையை இனிதே துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி இரவு (அவர்களுக்கு திருமணம் நடந்தது ஜூன் 13 2022) நண்பர்களுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்து கிளம்பிய இந்த ஜோடி திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுள்ளனர். பிரதீபா அங்கு white pasta சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
சந்தோஷமாக நேரத்தை கழித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளனர், ஆனால் அன்றிரவு பிரதீபா அதிக அளவில் வாந்தி எடுக்கவே பயந்துபோன விஜய குமார் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
ஏற்கனவே பிரதீபாவுக்கு இருதய சம்மந்தமான நோய் இருப்பதாகவும் அதற்கு அவர் மருந்துகள் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீபா இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஜய குமார் அதிர்ச்சியில் உறைந்துபோக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பிரதீபா இறந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.