அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகள் குறித்து வெளிவரும் செய்திகளை அறிவீர்கள். சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் இச்செய்திகள் அதிகமாக ஏன் இப்போது வெளிவருகின்றன என்பதற்குக் காரணங்கள் உள்ளன.
எக்காலத்திலும் இத்தகைய மாணவர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டிலுள்ள 37,000 அரசுப் பள்ளிகளில் ஏதோ ஏழெட்டுப் பள்ளிகளில் நடந்தவற்றை பூதாகரமாக்கி அரசுப் பள்ளி மாணவர்களே இப்படித்தான் என்கிற பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவற்றை பொதுப்படையாக்குவது மாணவர்களுக்கு பயன் தராது.
இவை நடக்கவே இல்லை எனச் சொல்ல வரவில்லை. ஆனால் அதை வைத்து முத்திரை குத்தும் வேலை நடக்கிறது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கக் கூடும். இத்தகைய மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு தங்கள் மகளை அனுப்பக் கூடாதென முடிவெடுத்து பல பெண் குழந்தைகளை பள்ளியிலிருந்து நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது.
சக்திக்கு மீறி தனியார் பள்ளியில் குழந்தைளை சேர்த்து பொருளாதாரச் சிக்கலில் குடும்பங்கள் சிக்கிவிடும் அபாயம் இருக்கிறது.
இப்படி முத்திரை குத்துவதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புண்டு. ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மாணவர்கள் பயிலக் கூடியவை அரசுப் பள்ளிகள். அரசுப் பள்ளி மாணவர்களை இவ்வாறு பிம்பப்படுத்துவது அமூகத்தின் ஒரு சில பிரிவினரை மட்டும் தவறாக சித்தரிக்கும் ஆபத்தும் உண்டு.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் சரியாக ஒவ்வொரு வீடியோவாக வெளியாவதற்குப் பின் தனியார் பள்ளிகளின் லாபி இருக்கிறது. ஏனெனில் அரசுப் பள்ளியில் படித்தோர்க்கு உயர்கல்வியில் 7.5 % இட ஒதுக்கீடு என்கிற திட்டத்தால் பலர் அரசுப் பள்ளிகளுக்கு வர வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் கொரோனா காலத்திற்குப் பின் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதி இல்லாமல் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திருக்கின்றனர். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான் அரசுப் பள்ளிகளுக்கு எதிரான இந்தப் பரப்புரையைப் பார்க்க வேண்டும்.
ஆகவே இதற்கு மாற்றான ஒரு பரப்புரையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்த பிம்பத்தை மாற்றியாக வேண்டும்.
வேறு ஒன்றுமில்லை. அரசுப் பள்ளியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அப்பள்ளி என்ன தந்திருக்கிறது என்பதையும் பள்ளி நினைவுகளையும் எழுதி
#GovtSchoolStudent
என்கிற ஹேஷ்டேகை இறுதியில் போட்டால் போதுமானது.
ஒரு சிறிய கல்தான் நீர்நிலையில் மிகப்பெரிய வட்டத்தை உருவாக்குகிறது என்பதை மனதில் வைத்து இரண்டு வரியோ இரண்டு பக்கங்களோ எப்படியாயினும் எழுதுவதோ அல்லது காணொலியாக பதிவு செய்வதோ ஏதேனும் ஒன்றைச் செய்தால் நன்மை விளையும்.
இன்று 12.05.2022, வியாழன் காலை 10 மணிக்கு உங்கள் சமூக ஊடகப் பக்கங்களில், குறிப்பாக ட்விட்டர், பேஸ் புக்கில்
#GovtSchoolStudent
ஹேஷ்டேக் இணைத்துப் பதிவிட்டால் பரப்புரைக்கு வலுவூட்டுவதாக அமையும். நீங்கள் அரசுப் பள்ளியில் பயிலவில்லை எனினும் இது குறித்து எழுத விரும்பினால் எழுதுங்கள்
நன்றியும் அன்பும்!
கவின் மலர்