சென்னை: உணவு டெலிவரி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சென்னையின் முக்கிய சாலை ஓரங்களில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான டெலிவரி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரில் 24 மணி நேரமும் உணவு டெலிவரி சேவை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஊழியர்கள் வெயில், மழை போன்ற பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிகின்றனர். குறிப்பாக, இவர்களில் 10% பேர் பெண்களாக இருக்கும் நிலையில், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மேலும், ஓய்வெடுக்க இடமில்லாமல் சாலை ஓரங்களில் அவர்கள் தஞ்சம் அடைவது வழக்கம்.
இந்நிலையில், டெலிவரி ஊழியர்களின் சிரமத்தை உணர்ந்த சென்னை மாநகராட்சி, முதற்கட்டமாக நகரின் முக்கிய பகுதிகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகர ஆணையர் குமரகுருபன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறுகையில், “டெலிவரி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மாநகராட்சி உறுதி பூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முக்கிய சாலைகளில் ஏசி ஓய்வறைகள் அமைக்கப்படவுள்ளன” என்றார்.
சுமார் 600 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த ஓய்வறைகளில், கழிவறை, குடிநீர் வசதி மற்றும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் தி. நகர் போன்ற பகுதிகளில் இந்த குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், நகரின் பிற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் இந்த புதிய திட்டம், டெலிவரி ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடினமான பணிச்சூழலில் அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என நம்பப்படுகிறது.
உலகின் 42 நாடுகளில் இயங்கும் சிங்கப்பூர் கம்பெனி.. மிகப்பெரிய வேலை வாய்ப்பு அறிவிப்பு!