Air India Express: திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கியமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 04, 2025) அதிகாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 113 பயணிகள் பயணம் செய்வதற்காக அமர வைக்கப்பட்டிருந்தனர். விமானம் ஓடுதளத்தில் (ரன்வே) சற்று தூரம் சென்றபோது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பது விமானியால் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமானம் உடனடியாக ஏப்ரான் பகுதிக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டது. பின்னர், தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கோளாறை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டதால், விமானத்தில் இருந்த 113 பயணிகளும் இறக்கப்பட்டு, விமான நிலையத்தின் ஓய்வு அறையில் அமர வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு குடிநீர் மற்றும் உணவு வகைகள் விமான நிறுவனத்தால் வழங்கப்பட்டன.
விமானம் மீண்டும் புறப்படும் நேரம் குறித்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை சரிசெய்த பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 113 பயணிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் தாமதமானதால், பயணிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
இதற்கு முன்னதாகவும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.