TamilSaaga

“8.25 கோடி ரூபாய் பந்தயக் குதிரை”.. சிங்கப்பூரின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா டிம் டேவிட்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் ஏன் “முக்கியம்”?

டிம் டேவிட் – ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சிங்கப்பூருக்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர், இன்று இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 8.25 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறார். சர்வதேச அரங்கில் சரித்திரம் படைப்பதற்கான மேடை இப்போது அவர் முன்! இந்த மேடை இவருக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அம்மேடைக்கும் அவர் அவசியம். பல முன்னாள் வீரர்களை இழந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிம் டேவிட் ஏன் அவசியமாகிறார்?

சிங்கப்பூரில் 2 இளைஞர்களுக்கு கூரையை பிச்சுக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. அதுவும் இரண்டு முறை – திறமைக்கார பசங்கதான்!

இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதும் அவசியம். இதுவரை 5 ஐ.பி.எல் கோப்பைகள் வென்றிருக்கும் மும்பை அணி எப்போதுமே ஒரு நிரந்தரமான அணியைக் கொண்டிருந்தது. அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் அந்த அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய அங்கமாக விளங்கினார்கள். கைரன் பொல்லார்டோடு இவர்களும் இருப்பது, எப்போதும் அந்த அணிக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. குருனால் பாண்டியாவும் பேட்டிங்கில் கலக்க, மும்பை இந்தியன்ஸ் மிடில் ஆர்டர் அவர்களின் மிகப்பெரிய ஆயுதமாக மாறியது.

ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன் போன்றவர்கள் சொதப்பினாலும் அதன்பிறகு வரப்போகும் அந்த பெரும் படை எப்போதுமே எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. அடித்து ஆட வீரர்கள் இருப்பதால், தொடர் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு நிதானமாக பார்ட்னர்ஷிப் உருவாக்கும் சுதந்திரமும் வீரர்களுக்கு இருந்தது. அவர்கள் மூவருமே பந்துவீசுபவர்கள் என்பதால் ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக விளையாடும் சுதந்திரமும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை!

பாண்டியா சகோதரர்கள் இருவரும் ஒவ்வொரு புதிய அணியில் இணைந்துவிட்டனர். ஹர்திக் குஜராத் அணியின் கேப்டனாகிவிட்டார். அணியின் முக்கிய அங்கமாக இருந்த மூன்று ஆல்ரவுண்டர்களில் இருவரை இழந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ். ஆல்ரவுண்டர்கள் என்பதை விட, அணியின் 2 ஃபினிஷர்களை இழந்துவிட்டது. இதுதான் அணியின் மிகப்பெரிய இழப்பு.

இது ஏன் சாதாரண இழப்பு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள இன்னொரு விஷயத்தையும் அலசவேண்டும். இன்றைய டி-20 உலகத்தில் ஃபினிஷர்களைக் காண்பதே மிகவும் அரிதாக இருக்கிறது. பல அணிகள் சரியான ஃபினிஷர்கள் இல்லாததால் தான் தடுமாறுகின்றன. அனைத்து அணிகளையும் அலசிப் பார்த்தால், ஒன்று ஃபினிஷர்ளே இல்லாமல் இருக்கும், இல்லை ஒரேயொருவர் மட்டும் போராடுவார். அப்படியான அணிகள் கோப்பை வெல்லத் தடுமாறும். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அணிகளிலோ குறைந்தபட்சம் இரண்டு நல்ல ஃபினிஷர்களாவது இருப்பார்கள். உதாரணம்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ். இப்போது அதில் இருவரை இழந்திருப்பது மிகப்பெரிய இழப்பு தானே!

இப்படி, மிகப்பெரிய அணி ஒன்றின் மிகமுக்கிய இடத்தில் ஆடவிருக்கிறார் டிம் டேவிட். அவர் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கும்!

வரலாறை விட்டுவிட்டு இந்த சீசன் அணியைப் பார்ப்போம். ரோஹித் ஷர்மாவோடு இஷன் கிஷன் ஓப்பனிங் ஆடவே வாய்ப்பு அதிகம். அதனால், இதற்கு முன்பு கிஷன் ஆடிய இடத்தில் இளம் வீரர் திலக் வர்மா ஆடுவார். இதுவரை ஐ.பி.எல் தொடரில் விளையாடிடாத ஒரு 20 வயது இளம் வீரரிடம் அதிகம் எதிர்பார்த்துவிட முடியாது. அதனால், அந்த இடம் சற்று பலவீனமாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் பொல்லார்ட், டேவிட் இருவர் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகும்.

இந்தியர்களே… சிங்கப்பூருக்கு கிளம்ப தயாராகுங்க… 11 ஆண்டுகளில் இல்லாத “உச்சபட்ச” வேலைவாய்ப்பு- வேலை தேடுவோருக்கு காது குளிர வந்திருக்கும் ManpowerGroup சர்வே

முன்பு சொன்னதைப்போல் 2 ஆல்ரவுண்டர்களை இழந்திருப்பதால், முன்பைப் போல் ஒரு பேட்ஸ்மேனையும் கூடுதலாகக் களமிறக்க முடியாது. குறைவான பேட்ஸ்மேன்களோடு ஆடுவது என்பது, ஒவ்வொரு பேட்ஸ்மேனின் மீதும் பொறுப்பை அதிகப்படுத்தும். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் மீது. சொல்லப்போனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் இருந்ததைப் போலத்தான். அந்த அணியில் சரியான ஆல்ரவுண்டர்கள் இருக்கமாட்டார்கள். பௌலர்களும் சொதப்புவார்கள் என்பதால், எப்போதுமே குறைந்தபட்சம் 5 பௌலர்களுடனாவது போகவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆறாவதாக இறங்குபவருமே பேட்டிங்கை விட பௌலிங்கில் பங்களிப்பவராகத்தான் இருப்பார். அப்படியிருக்கும்போது டி வில்லியர்ஸ் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்படும் அல்லவா. அப்படித்தான் இந்த மும்பை அணியில் டிம் டேவிட் நிலையும்.

கடந்த சீசன் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஆடியபோதும்கூட டிம் டேவிட் அந்த நிலையில் தான் இருந்தார். வழக்கமாகவே அந்த அணி பேட்ஸ்மேன்களுக்குக் கூடுதல் நெருக்கடி இருக்கும் என்பதால், அது இவருக்கும் தொற்றிக்கொண்டது. அதனால், பெரிதாக சோபிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், மும்பை இந்தியன்ஸில் அந்த நெருக்கடி இருக்காது என்பது வேண்டுமானால் அவருக்கு சாதகமாக அமையும்.

அதுமட்டுமல்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒட்டுமொத்த ஸ்குவாடையும் பார்த்தால், அங்கு இருக்கும் ஒரே பேக் அப் பேட்ஸ்மேன், இளம் தென்னாப்பிரிக்க வீரரான டிவால்ட் பிரெவிஸ் தான். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பிரெவிஸ். இவரை எடுத்திருப்பது அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தானே தவிர, உடனே அவரை அணியில் இணைத்துவிட முடியாது. சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தாலும், அவர் டாப் ஆர்டரில் ஆடக்கூடியவர். அவரை ஆறாவது பேட்ஸ்மேனாக இறக்க முடியாது. அதனால், டிம் டேவிட் 14 போட்டிகளிலும் விளையாடித்தான் ஆகவேண்டும். பேக் அப் யாரும் இல்லை என்பதால், நன்றாகவும் விளையாடியாக வேண்டும்.

சிங்கப்பூரில் இப்படியும் சில இளசுகள்.. நடுரோட்டில் ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொண்ட சம்பவம் – தலையில் தட்டி கைது செய்த போலீஸ்

இவை அனைத்தையும் கடந்து, 8.25 கோடி ரூபாய் என்ற அந்த ஏலத்தொகையே அவர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும் அல்லவா! மும்பை போன்ற பெரிய அணி ஒன்று, சிங்கப்பூருக்கு ஆடிய ஒரு வீரரை பெரிய அளவில் நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறது. டிம் டேவிட் அந்த நம்பிக்கையை காப்பாற்றக்கூடியவர் தான். அதை பொறுத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts