பணக்காரர்களின் விளையாட்டு மைதானம் என்று சிங்கப்பூர் அவ்வப்போது வர்ணிக்கப்படுவது உண்டு. ஒருவகையில் அது உண்மையும்கூட என்றே சொல்லலாம். ஷாப்பிங் மால்கள், ஆடம்பர ஹோட்டல்கள், படோபகாரமான உணவு என இவை எல்லாவற்றையும் தாண்டி பாரம்பரியமான வரலாற்றைக் கொண்ட பல இடங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு இந்த சின்னஞ்சிறிய நாடு வழங்குகிறது. குடும்பத்துடன் கண்டுகளிக்க, வசதியான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன.
சிங்கப்பூர் கொண்டிருக்கும் சிறப்பான பொதுப்போக்குவரத்து வசதியால் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவருவது என்பது எளிதான காரியம். நகரில் இருக்கும் இடங்கள், அதன் அமைவிடம் உள்ளிட்ட தகவல்கள் பற்றி வரைபடம் மூலம் நீங்கள் அறிந்துகொண்டீர்களானால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது ரொம்பவே ஈஸியாக இருக்கும். எல்லா இடங்களிலும் ஆங்கிலம் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதால், எளிதாக நமக்குத் தேவையான தகவல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல், தகவல் பலகைகளும் சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால், அதிலும் சிக்கல் இருக்காது. இதனாலேயே, இடங்களை எளிதாகத் தெரிந்து கொள்வதில் ரொம்பவே கம்ஃபோர்டபிளான தெற்காசிய நாடாக சிங்கப்பூரைச் சொல்கிறார்கள். அருகிலிருக்கும் தாய்லாந்து, வியட்நாமை விட கொஞ்சம் காஸ்ட்லியான நாடுதான் என்றாலும் சிங்கப்பூர் டிராவலர்களின் சொர்க்கம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிங்கப்பூரின் 20 Top-Rated சுற்றுலா இடங்கள் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
- Marina Bay Sands
Marina Bay Sands ரெசார்ட் காம்ப்ளக்ஸில் இருக்கும் இடங்கள் நிச்சயம் உங்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காம்ப்ளக்ஸில் ஹை-எண்ட் லக்ஸுரி ஹோட்டல் ஒன்றும் உள்ளது. மேலும், கலை-அறிவியல் அருங்காட்சியகம், உயரமான Skypark அப்சர்வேஷன் டவர் டெக் உள்ளிட்ட பல இடங்கள் புத்துணர்வை நமக்கு அளிக்கும். குறிப்பாக Skypark அப்சர்வேஷன் டவரில் இருந்து மொத்த சிங்கப்பூர் நகரத்தையும் பார்க்கலாம். அந்த வியூ கொடுக்கும் அனுபவமே அலாதியானது. பொதுவாகக் கப்பலைக் கடலில் நாம் பார்த்திருக்கலாம். உயரமான இடத்தில் பார்த்திருக்க வாய்ப்பே கிடையாது. ஆனால், Skypark அப்சர்வேஷன் டவர் டெக் அப்படியே ஒரு கப்பலைப் போலவே ஹோட்டலின் ரூஃப் டாப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும். சிங்கப்பூரை உயரமான இடத்தில் இருந்து ரசித்துக் கொண்டே அங்கிருக்கும் நீச்சல்குளத்தில் நீந்தலாம். அங்கிருக்கும் infinity pool நீச்சல் குள அனுபவம் ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால், அப்சர்வேஷன் டெக்குக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அந்த Skypark இல் இருந்து சிங்கப்பூரின் பிரமாண்டமான டபுள் ஹெலிக்ஸ் பாலம், துறைமுகம், கடற்கரையோர பூங்கா (101 ஹெக்டேர் நிலம் மொத்தமாக பூங்காவாக வடிவமைக்கப்பட்டிருக்கும்) மற்றும் சிங்கப்பூர் நகரின் அழகுக்கு மெருகுகூட்டும் ஓங்கி உயர்ந்த கட்டடங்களின் அழகையும் அங்கிருந்தபடியே ரசிக்கலாம்.
Skypark இல் இருக்கும் ரெஸ்டாரெண்டில் அமர்ந்து காபி, ஸ்நாக்ஸுடன் சிங்கப்பூரின் அழகை கழுகுப் பார்வையில் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்க முடியும். ஒவ்வொரு நொடியும் ஒரு ஆச்சர்யத்தை ஒளித்துவைத்திருக்கும் சிங்கப்பூரை இந்த வியூவில் பார்ப்பது நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும். அந்த உயரமான ஹோட்டல் முன்னால் நின்று கொண்டு உங்களால் போட்டோ எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு 50 சிங் டாலர்கள் என்ற அளவுக்கு நீங்கள் செலவழிக்க வேண்டி வரும். இதனால், உங்கள் சக சுற்றுலாப் பயணியை வைத்து போட்டோ எடுத்துக்கொள்வது நலம்.
எங்கிருக்கிறது?
10 Bayfront Avenue, Singapore
கூடுதல் தகவல்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் உதவலாம் – http://www.marinabaysands.com/
- Gardens by the Bay
செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த Gardens by the Bay-யின் இயற்கை அழகை நீங்கள் ஒருமுறை பார்த்துவிட்டீர்கள் என்றால், கண்டிப்பாக இதை மிஸ் செய்யவே கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பூங்காவில் Supertree Grove எனப்படும் உயரமான மரங்கள் போன்று அமைக்கப்பட்டிருக்கும் டவர்கள் ரொம்பவே ஸ்பெஷல். தரைக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் இருந்தபடி நகரின் அழகை, இயற்கையோடு இணைந்து ரசிக்கும் அந்த மொமண்டில் நீங்கள் நகருக்குள் இருந்து காட்டுக்குள் வந்தது போன்ற ஒரு உணர்வைப் பெற முடியும். டிராஃபிக் இரைச்சல், நகரும் வாகனங்களின் ஒலி, கான்கிரீட் காடு போன்றவற்றில் இருந்து தப்பிய ஒரு உணர்வைக் கொடுக்கும்.
அதன் அழகை ரசித்துக்கொண்டே அடுத்ததாக அமைந்திருக்கும் Cloud Forest Dome-க்குப் போங்க. நிச்சயம் அங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கொண்டிருக்கும். கிரீன்ஹவுஸ் அமைப்பில் ஒரு பெரிய கூடாரம் போன்று அமைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பில் 1500 முதல் 3000 மீ மழைப்பொழிவு கொண்ட காட்டின் இயற்கைச் சூழலில் வளரும் பல்லுயிர்த் தன்மையை செயற்கையாகவே வடிவமைத்திருப்பார்கள். இதில், இருக்கும் மற்றுமொரு அதிசயம் 35மீ உயரத்தில் இருந்து விழும் செயற்கை நீர்வீழ்ச்சி. இதுதான் உலகின் மிக உயரமான Indoor நீர்வீழ்ச்சி என்ற பெருமைபெற்றது.
Gardens by the Bay-வை விசிட் செய்ய நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாக இருந்தால் 20 சிங் டாலர்களும் (16 அமெரிக்க டாலர்கள்), வெளிநாட்டு சுற்றுலாப் பயணியாக இருந்தால் 28 சிங் டாலர்களும் (22 அமெரிக்க டாலர்கள்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
திறந்திருக்கும் நேரம், சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி, நுழைவுச் சீட்டுகள் போன்ற விவரங்களுக்கு http://www.gardensbythebay.com.sg/en.html என்ற இணையதளத்துக்கு விசிட் அடியுங்கள்.
- Botanic Gardens
Gardens by the Bay-வைப் போலவே சிங்கப்பூரின் மற்றொரு அடையாளம் இந்த Botanic Gardens. உயரமான கட்டடங்களோடு சுத்தமான கான்கிரீட் காடாக சிங்கப்பூர் இருந்தாலும், அதன் இயற்கை வளங்களோ செழுமையானவை. சிங்கப்பூரின் பாரம்பரிய தாவரங்களைப் பாதுகாக்க அரசு எடுத்த முயற்சியின் பலன்தான் இந்த Botanic Gardens. யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்கள் அந்தஸ்து கொண்ட இடங்கள் பட்டியலில் இடம்பிடித்த சிங்கப்பூரின் முதல் இடம் இதுதான்.
மரங்கள், செடிகள் சூழ் பாதையில் நடந்துகொண்டே சிங்கப்பூரின் பாரம்பரிய மரங்கள் பற்றி தெரிந்துகொள்ள இதுவொரு நல்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அதோடு, இங்கிருக்கும் சிங்கப்பூரின் National Orchid Garden-க்கு மறக்காமப் போய்ட்டு வந்துடுங்க. மேலும், இயற்கைத் தோட்டம், இயற்கை ஏரி, உயரம் குறைந்த போன்சாய் தோட்டம், சிற்பங்கள், மற்ற தோட்டங்களும் உங்களுக்குப் புதியதோர் அனுபவத்தைக் கொடுக்கும்.
விசிட்டிங் நேரம் உள்ளிட்ட தகவல்களுக்கு – www.nparks.gov.sg/sbg
- Singapore Zoo
உலகின் ஆகச்சிறந்த மழைக்காடுகள் சூழலில் இருக்கும் zoo என்ற புகழ்பெற்றது Singapore Zoo.சுத்தமான சூழலில் விலங்குகள் எல்லாம் இயற்கையாக அதன் வாழிடங்களிலேயே இருப்பது போன்ற உணர்வோடு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழல் போன்றவை உங்களுக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும். சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையின் மெயின் அட்ராக்ஷனான `singapore Zoo Breakfast with the Orangutans’-ஐ மறக்காம எஞ்சாய் பண்ணுங்க மக்களே..!. பகல் நேரம் தவிர இரவு நேரங்களில் நைட் சபாரி, ரிவர் சபாரி போன்ற வசதிகளும் இருக்கின்றன.
- Orchard Road
வேர்ல்டு கிளாஸ் சிட்டியான சிங்கப்பூருக்கு வந்துட்டு ஷாப்பிங் இல்லைனா எப்படி… அதுக்கு விடை இந்த Orchard Road. இந்த சாலையில் மட்டுமே 22 மால்களும், 6 டிபார்மெண்டல் ஸ்டோர்களும் இருக்கின்றன. இதனால், சிங்கப்பூர் ஷாப்பிங் அனுபவத்தை இங்கிருந்தே நீங்கள் தொடங்கலாம். எந்தப் பக்கம் திரும்பினாலும் சர்வதேச பிராண்டட் ஸ்டோர்களின் தரிசனத்தைப் பெறலாம். அத்தோடு, சர்வதேச உணவகங்கள் தொடங்கி IMAX சினிமாஸ் உள்ளிட்ட தியேட்டர்களும் இந்தப் பகுதியில் உங்களுக்குப் பொழுதுபோக்கைத் தரும்.
- Singapore Flyer
உலகின் மிகப்பெரிய giant observation wheel இது. சிங்கப்பூரின் அழகை உயரத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான வரப்பிரசாதம். அதிகாலை தொடங்கி இரவு வரை இதில் நீங்கள் பயணம் செய்ய முடியும் என்பதால், உங்கள் நாளைத் தொடங்கவும் அல்லது இனிய இரவுப் பொழுதைக் கழிக்கவும் சிறந்த ஒரு ஸ்பாட் இது என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் வசதிக்கேற்ப பல்வேறு பேக்கேஜ்கள் இருக்கின்றன.
- Raffles Hotel Singapore
பிரிட்டீஷ் காலனிய ஆட்சியின்போது கடந்த 1887-ல் கட்டப்பட்ட இந்த கட்டடம் சிங்கப்பூரின் பிரதான அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. புகழ்பெற்ற ஆங்கிலேயே எழுத்தாளர்களான ருத்யார்ட் கிப்ளிங், ஜோசப் கோனார்ட் மற்றும் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான சார்லி சாப்ளின் போன்றோர் தங்கிச் சென்ற ஹோட்டல் இது. சிங்கப்பூரின் புரதான கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவை அமைந்திருக்கும் கலோனியல் டிஸ்டிரிக்ட் பகுதியில் அமைந்திருக்கிறது. புரதான, பழமையான நினைவுச் சின்னங்களின் காதலர்கள் கண்டிப்பாக விசிட் அடிக்க வேண்டிய இடம்.
- Chinatown
சீனாவுக்கு நீங்கள் சென்றிருந்தால், அதன் நினைவுகளை நிச்சயம் கொண்டுவரும் சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதி. சீன கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டடங்களோடு, அந்த நாட்டின் ஆத்தெண்டிக் உணவு வகைகள் வரை இங்கு கிடைக்கும். அதோடு, இங்கிருக்கும் புகழ்பெற்ற இந்துக் கோயிலான ஸ்ரீமாரியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றது. புத்தரின் பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில் பௌத்தர்களின் புனித இடமாகக் கருதப்படுகிறது. கலாசார செறிவு மிகுந்த இந்தப் பகுதியின் முக்கியத்துவம் பற்றி ஆங்கிலத்தில் தகவல் பலகைகளும் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியின் மற்றொரு ஸ்பெஷல் அம்சம், அனைவருக்கும் இலவச வைஃபை வசதி அளிப்பது.
- Sentosa Island
சிங்கப்பூர் பீச் டெஸ்டினேஷன் இல்லையென்றாலும் கடற்கரை அனுபவம் கிடைக்க நீங்கள் Sentosa Island-க்கு விசிட் அடிக்கலாம். அத்தோடு Siloso Beach-உம் உங்களுக்கு ஆகச்சிறந்த பீச் அனுபவத்தைக் கொடுக்கும். பீச்சில் இருக்கும் இலவச கோர்ட்டுகளில் நீங்கள் பீச் வாலிபால் விளையாடி பொழுதுபோக்கலாம். அதேபோல், அருகே இருக்கும் Underwater World aquarium-த்துக்கு மறக்காமப் போய்ட்டு வந்துடுங்க.
- Clarke Quay
19-ம் நூற்றாண்டில் வணிகம் நடக்கும் முக்கிய மையப்புள்ளியாக இருந்த பகுதி, இப்போதும் அதன் பொலிவை இழக்காமல் பிஸியாக இருந்து வருகிறது. ஷாப்பிங்கை எல்லாம் முடித்துவிட்டு களைத்துப் போயிருந்தால், நீர்நிலைக்கு அருகே அமர்ந்து டின்னர் சாப்பிட விரும்புவர்களுக்கு ஸ்பெஷலான இடம் இது. அதை முடித்துவிட்டு அப்படியே படகில் ஏறி அருகில் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லலாம். மெரிலின் போன்ற சிங்கப்பூரின் முக்கியமான பகுதிகளை படகில் இருந்தவாறே நீங்கள் ரசிக்கலாம்.
- Universal Studios Singapore
Resorts World Sentosa பகுதியில் 49 ஏக்கர்களில் பரந்து விரிந்திருக்கும் இந்த ஸ்டூடியோ உங்களை ஹாலிவுட் உலகத்துக்கே அழைத்துச் செல்லும். இங்கு, நியூயார்க் நகரம், ஹாலிவுட் ஸ்டுடியோ, மடகாஸ்கர், பழங்கால எகிப்தின் தெருக்கள் என பல தீம்கள் நிரந்தர செட்டுகள் உங்களை வரவேற்கும். ஸ்டூடியோவுக்குள் நுழைந்துவிட்டால், அந்த இடங்களுக்கே நீங்கள் சென்றுவிட்டது போன்ற உணர்வைக் கொடுக்கும். அத்தோடு, ஷாப்பிங் மால்கள், உயர்தர உணவகங்கள் என சகல வசதிகளோடும் அமையப் பெற்றிருக்கும் இந்த இடத்தில் ஒருநாளை நீங்கள் தாராளமாகச் செலவிடலாம். குழந்தைகள், பெரியவர்கள், அட்வெஞ்சர் விரும்பிகள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற ராட்டின ரைடுகளும் கண்ணைக் கவரும் அம்சம்.
- Night Safari Singapore
வழக்கமான ZOO அனுபவத்தில் இருந்து மாறுபட்டு, விலங்குகளை அதன் வாழ்விடத்தில் இரவு நேரங்களில் கண்டுகளிக்க அற்புதமான வாய்ப்பை இது உங்களுக்கு வழங்கும். இதற்காக நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அதில், Leopard Trail என்பது சிறுத்தை, சிங்கம், புலி போன்ற விலங்குகளை எக்ஸ்குளூசிவாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்படுவது. The Fishing Cat Trail என்பது சிங்கப்பூரை வாழ்விடமாகக் கொண்ட விலங்குகளையும், East Lodge Trail மலேசியப் புலி உள்ளிட்ட விலங்குகளையும், Wallaby Trail என்பது ஆஸ்திரேலிய கங்காரு வகையிலான விலங்குகளுக்கான பிரத்யேகப் பயணப் பாதையாகும். ஆசிய யானைகளுக்கு உணவளிப்பது, கல்விரீதியிலான சுற்றுலா போன்ற ஆப்ஷன்களும் உங்கள் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுக்கலாம்.
- Merlion Park
சிங்கப்பூர் அரசின் அடையாளமாக விளங்கும் சிங்க நீர்வீழ்ச்சி இங்குதான் இருக்கிறது. சிங்கத்தின் தலையும் மீனின் உடல், வால் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் Merlion சிங்கப்பூரின் புரதானக் கதைகளில் வரும் விலங்கு என்று நம்பப்படுகிறது. இங்கிருக்கும் Merlion சிலை 8.6 மீட்டர் உயரமும் 70 டன் எடையும் கொண்டது. 2002-ல் சிலை நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட் இது.
- Asian Civilizations Museum
பழமை விரும்பிகளின் ஃபேவரைட் ஸ்பாட் இது. Empress Place Building என்றழைக்கப்படும் இந்தக் கட்டடம் 1865-ல் கட்டப்பட்டது. நியோ கிளாசிக்கல் கட்டடக் கலை அடிப்படையில் கட்டப்பட்ட இது, இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பெயர் பெற்றிருக்கிறது. இங்குதான், தற்போது ஆசிய கண்டத்தில் கலை, கலாசாரம், இனக் குழுக்கள் பற்றிய தரவுகள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் உருவாகக் காரணமாக இருந்த ஆசிய இனக் குழுக்களைப் பற்றியும் அவர்களின் கலாசார நம்பிக்கைகள் பற்றியும் இங்கு நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்தியப் பெருங்கடல் வணிகம், நம்பிக்கை மற்றும் கலாசாரம் தொடர்பான கதைகள் உள்ளிட்டவைகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
- Pulau Ubin (Granite Island)
சிங்கப்பூர் என்றாலே ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், பாலங்கள் என்று உங்கள் மனதில் இருக்கும் பிம்பம் இங்கு சென்றால் நிச்சயம் மாறிவிடும் என்றே சொல்லலாம். கற்குவாரிகள் அதிகம் இருந்ததால் மலாய் மொழியில் கிரானைட் தீவு என்று பொருள்படும் வகையில் Pulau Ubin என்று பெயர் பெற்றிருக்கிறது. 1960-களில் இருந்தது போலவே எளிமையான வாழ்வை இந்தத் தீவில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். Changi Point பகுதியில் இருந்து படகு மூலம் சுமார் 10 நிமிடங்களில் இந்தப் பகுதியை நீங்கள் அடைய முடியும்.
- Fort Canning Park
சிங்கப்பூரின் போர் வரலாற்றை நினைவுபடுத்துவது Fort Canning Park கோட்டை. அந்நியத் தாக்குதல்களில் இருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்கும் நோக்கில் 1859-ல் கட்டப்பட்ட இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் இரண்டாம் உலகப்போரின்போது பதுங்கு குழியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னர், 1942-ல் ஜப்பானியர்களிடம் சரணடைந்தது இந்தக் கோட்டை. அமைதியான இந்த சூழலில் நாடகம், கலைக் குழுவினரின் கலைகள் நடைபெறும் இடமாகவும், ஃபேமஸான பிக்னிக் ஸ்பாட்டாகவும் இருக்கிறது. கோட்டையின் முகப்புத் தோற்றத்தின் கம்பீரம் பல நாட்களுக்கு உங்கள் நினைவில் இருந்து அகலாது.
- The Maritime Experiential Museum
கடலில் அமைக்கப்பெற்றிருக்கும் இந்த இண்டோர்-அவுட் டோர் அருங்காட்சியகம் நிச்சயம் உங்களுக்கு வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸைக் கொடுக்கும். கடலில் பயணிக்கும் கப்பல்கள், நாட்டிகல் மைல்கள் எப்படி அளவிடப்படுகிறது, கடலில் திசை கண்டுபிடிப்பது என கடல் சார்ந்த பல்வேறு விஷயங்களை நீங்கள் இங்கு கற்றுக்கொள்ள முடியும். ஆப்பிரிக்கா – சீனா இடையில் பயணித்து கி.மு 830-ல் கடலில் மூழ்கிய Jewel of Muscat வணிகக் கப்பலின் மாதிரி இந்த மியூசியத்தின் முக்கியமான அம்சம்.
- Fort Siloso
சிங்கப்பூரின் ஒரே ராணுவ அருங்காட்சியகமான Fort Siloso செண்டோசா தீவில் இருக்கிறது. 181 மீ உயர நடைமேம்பாலமான Fort Siloso Skywalk trail வழியாக இதை நீங்கள் அடைய முடியும். 11 மாடி அளவுக்கு நெடுதுயர்ந்து நிற்கும் இந்த ஸ்டீல் பாலத்தை கண்ணாடி லிஃப்ட் வழியாகவோ அல்லது படிக்கட்டுகள் வழியாகவோ அடையலாம். உயரமான அந்தப் பாலத்தில் நடந்தவாறே அருகிலிருக்கும் தீவுகள், காட்டுப்பகுதிகளைக் கண்டுகளிக்கலாம். கோட்டையில் பீரங்கிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதோடு, 1800-களில் அங்கு வசித்த ராணுவ வீரர்கள் எப்படி இருந்தார்கள் என்பது பற்றிய தகவல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
- National Gallery Singapore
ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த கலைஞர்களின் கலைப்படைப்புகள் இரண்டு பகுதிகளாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 64,000 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கேலரியில் 9,000-த்துக்கும் அதிகமான கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுதவிர, ஓவியங்கள், போட்டோகிராபி தொடர்பான தற்காலிகக் கண்காட்சிகளும் அவ்வப்போது இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
- Jewel Changi Airport
சிங்கப்பூரில் நீங்க மிஸ் பண்ணாமப் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் இது. 10 அடுக்கு மாடிகளைக் கொண்டிருக்கும் இந்த விமான நிலையம், உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாகப் பல ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட கடைகளோடு மிகப்பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த விமான நிலையத்தின் முக்கியமான அம்சமே, 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் HSBC Rain Vortex நீர்வீழ்ச்சிதான். 2,000 மரங்கள் சூழ அமைக்கப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி நிச்சயம் தனித்துவமான அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். இரண்டு தியேட்டர்களுடன் இருக்கும் இந்த விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் தனித்தனியாக கார்டன்கள் இருக்கின்றன. அவற்றையும் மறக்காமப் பார்த்துடுங்க.