சிங்கப்பூரில் வீடு தேடுபவர்களுக்கு உதவும் https://www.99.co/ எனும் இணையதளம் ஒன்றை வைத்திருப்பவர் `Darius Cheung’. அந்த இணையதளத்தை இவர் தொடங்கிய பின்னணியில் புறக்கணிப்புடன் கூடிய ஒரு காரணம் இருக்கிறது.
Darius Cheung கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தேட நினைத்திருக்கிறார். அதற்காக இவர் தொடர்புகொண்ட ஏஜெண்டுகள் ஆரம்பத்தில் இவருக்கு முறையாகப் பதிலளித்திருக்கிறார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல மெல்ல பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாகியிருக்கிறார்கள். அடுத்தடுத்து இவர் தொடர்புகொள்ளும் ஏஜெண்டுகள் இதேபோல், நடந்துகொள்ளவே இவருக்கு சந்தேகமாகியிருக்கிறது.
ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று புரியாமலேயே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கான பதில் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஏஜெண்டுகளில் ஒருவர், ‘உங்களுடைய மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர். அதனால், உங்களுக்கு வீடு கொடுக்க வீட்டு உரிமையாளர்கள் முன்வரவில்லை’ என்று அதிர்ச்சியான காரணம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். இதனால் ‘இந்தியப் பின்னணி கொண்டவர்களுக்கு வீடு கொடுக்க மாட்டார்களா?’ என்ற கேள்வி அவரைத் துரத்தியிருக்கிறது. ஆம்! இவருடைய மனைவி ஒரு இந்தியர். பெயர் ரோஷினி.
சிங்கப்பூரில் இனவாதம்
சிங்கப்பூரில் பாரம்பரியமாக வசித்து வரும் சிங்கப்பூர் குடிமக்களில் சிலர், வெளிநாட்டில் இருந்து குடியேறுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகளைப் பறித்துவிடுவதாக நினைக்கிறார்கள். இந்த அடிப்படையான எண்ணம்தான் சிங்கப்பூரில் மற்ற இனக்குழுக்கள் மீதான வெறுப்பு ஏற்படக் காரணமாக பார்க்கப்படுகிறது. வீடு வாடகைக்குக் கொடுப்பதில் தொடங்கி பொது இடங்களில் மோதல்கள் என பல சம்பவங்கள் சிங்கப்பூர் வரலாற்றில் இருக்கின்றன. 1960-களில் இப்படியான மோதல்கள் அதிகரித்த நிலையில், இனவாததுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு எடுத்து, இதற்காகத் தனியாக சட்டத்தையும் இயற்றியது. ஆனால், அதன்பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படியான சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கின்றன.
சிங்கப்பூரில் கொரோனா காரணமாக லாக்டவுன் போடப்பட்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சிங்கப்பூரில் `Hindocha Nita Vishnubhai’ என்கிற 55 வயதான பெண்மணி, பிரைவேட் டீச்சராகப் பணியாற்றி வருகிறார். இந்தியப் பாரம்பரியப் பின்னணி கொண்ட இவர், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் இவரை வழி மறித்திருக்கிறார்கள். அந்த வயதான பெண்மணியிடம் மாஸ்கை ஒழுங்காகப் போடும்படி சொல்லியிருக்கிறார்கள். அவர், தான் மாஸ்கைச் சரியாகத்தான் போட்டிருக்கிறேன் என்று பதில் சொல்லியதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சு, வளர்ந்து ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறுகிறது.
அந்தப் பெண்ணைத் தாக்கிய அந்த தம்பதியினர், இனரீதியாகவும் இழிவுபடுத்தும் வகையில் வசை பாடுகின்றனர். அவர்கள் தாக்குதலில் நிலைகுலைந்துபோன அந்தப் பெண், கீழே விழுந்திருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து, அந்தப் பெண்ணைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கண்டித்தனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் தொடங்கி 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் அத்தோடு 2000 சிங் டாலர்கள் முதல் 5,000 சிங் டாலர்கள் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருக்கிறது.
இந்தியர்களுக்கு ஏன் வீடு கொடுக்க மறுக்கிறார்கள்?
சிங்கப்பூரில் இருப்பவர்கள் சிலர் இந்தியர்கள் என்றாலே பொதுவாக சுத்தமாக இருக்க மாட்டார்கள்; அதனால், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. மேலே குறிப்பிட்ட காரணத்தோடு, இந்த காரணமும் சேர்ந்துகொள்ளும் நிலையில், அவர்கள் இந்தியர்களுக்கு வீடு கொடுக்கத் தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆன்லைனில் வீடு தேடுபவர்களுக்கான இணையதளங்கள் சிலவற்றில், No Indians’,No PRC (People Repubic of China)’ போன்ற ஃபில்டர்கள் இருப்பதைக் காண முடியும். இது இந்தியர்கள், சீனர்களுக்கு வீடு வழங்கக் கூடாது என்ற வீட்டு உரிமையாளர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.
குறிப்பாக, 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கப்பூரில் குடியேறும் வெளிநாட்டினர் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்தது. இதனால், சிங்கப்பூர் பூர்வ குடிகளில் சிலர் இந்த குடியேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூரில் இந்தியர்கள் மட்டுமல்ல சீன பாரம்பரியப் பின்னணி கொண்டவர்களுக்கும் இதே நிலைதான் என்கிறார்கள். 21-ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 25.7% என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
இதே எண்ணிக்கை அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில் 18.7% ஆக இருந்தது என்கிறது 2012-ல் ` Migration Policy Institute’ வெளியிட்ட அறிக்கை. 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையான 39 லட்சம் பேரில், 9.1% இந்தியர்கள் வசிக்கிறார்கள். வளர்ந்து வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை சிங்கப்பூர் பூர்வகுடிகளில் சிலருக்கு மட்டுமே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது; மாறாக சிங்கப்பூர் மக்கள் எல்லாருக்கும் அல்ல என்பதுதான் உண்மை.
இனவாதத்துக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு எடுத்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் அதேநேரத்தில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்களை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆண்டுதோறும் ஜூலை 21-ம் தேதி `இன நல்லிணக்க நாள்’ (Racial Harmony Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் இனரீதியான பாகுபாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூர் மக்களால் தான் புறக்கணிக்கப்பட்டதால் அதற்காகவே தொடங்கப்பட்ட வெப்சைட் தான் 99.co. 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் இதனை நிறுவினார். இன்று மில்லியன்களில் இந்த வெப்சைட் வருமானம் பார்த்து வருகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழின் மூத்த கவிஞன் கனியன் பூங்குன்றனார் பாடி விட்டுச் சென்ற வரிகளை நினைவு கொள்வோம்…
`யாதும் ஊரே யாவரும் கேளிர்’..