சிங்கப்பூரில் வேலையே இல்லாமல் தத்தளித்த ஒருவர், 4 பிள்ளைகள் உள்ள குடும்பத்துக்கு எப்படி அடுத்த வேளை சாப்பாடு கொடுக்கப் போகிறோம் என்ற தவித்த ஒருவர், இன்று சிங்கப்பூரில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பி, சிங்கையின் அடையாளமாக உருவெடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் அவர் ஒரு தமிழர் என்று சொன்னால்…..?
ஆம்! அவர் தான் திரு.ராமச்சந்திர முருகையா.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திர முருகையா, 1948ம் ஆண்டு பிழைப்பு தேடி சிங்கப்பூர் வந்திருந்தார். வறுமை, குடும்ப கஷ்டம் என்று பல இன்னல்களை களைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிங்கப்பூர் வந்தவர் இவர்.

இதுகுறித்து அவர் irememberSG யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் சிங்கப்பூர் வந்த போது, இது ஒரு கிராமம் போன்று தான் இருந்தது. டிராஃபிக் விளக்குகள் கூட இருக்காது. போக்குவரத்து அனைத்தும் One-way ஆகத் தான் இருக்கும். Stamford Road-ல் மட்டும் ஒரேயொரு டிராஃபிக் லைட் இருக்கும். அதைப் பார்ப்பதற்காகவே மக்கள் அங்கு வருவார்கள்.
முதன் முதலில் நான் இங்கு Straits times எனும் செய்தி நிறுவனத்தில் தான் பணிபுரிந்தேன். 1948-ல் இருந்து 1950 வரை என இரண்டு வருடங்கள் அங்கு பணிபுரிந்தேன். இப்போது மின்சாதனங்கள் எல்லாம் உள்ளன. அப்போது எதுவும் கிடையாது. கைகளால் மட்டுமே எழுத வேண்டும்.
அதன் பிறகு, Singapore Tiger Standard எனும் நிறுவனம் திறக்கப்பட்டது. எனது நண்பர்கள் என்னை அந்த நிறுவனத்துக்கு வேலை செய்ய அழைத்தார்கள். ஏனெனில், அங்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில், நமது சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜரத்தினம் அவர்களும் என்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்க்க நிறைய பேர் வருவார்கள். நமது முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்களும் நிறைய முறை அவரை பார்க்க அங்கு வருவார். ஆனால், சிங்கப்பூரில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். அதன்பிறகு, கிட்டத்தட்ட 1 வருடம் எந்த வேலையும் இன்றி இருந்தேன். வேலையை தேடி தேடி அலைந்தேன்.
1959 முதல் 1960 வரை வேலையே கிடைக்கவில்லை. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. அதன் பிறகு, 1960ன் இறுதியில் ஒரு சிறிய கடை ஒன்றை அமைத்தேன். சிகரெட்டுகள், வெற்றிலை மற்றும் சில பூஜை சாமான்களை விற்க தொடங்கினேன். ஒரு நாளைக்கு 60-லிருந்து 100 டாலர்கள் வரை வருமானம் கிடைத்தது. தொடக்க எங்களுக்கு மிக மிக கடுமையாக இருந்தது. கடை மிகவும் சிறியதாக இருந்தது. அப்போது எனக்கு 4 பிள்ளைகள் இருந்தனர்.
இந்த கடையின் வருமானத்தை வைத்து தான் என் குடும்பத்தை நடத்தி வந்தேன். இதனால் மிகக் கடுமையாக உழைத்தேன். காலை 6 மணிக்கு தொடங்கும் வேலை, சில சமயங்களில் இரவு 11 மணி வரை செல்லும். ஆனால், நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வேன்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு, கடைக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய இடத்தை எடுத்து அதில் பூக்கடை வைத்தேன். அப்போது எனது மகனுக்கு 2 வயது தான். நிறைய கடன் இருந்தது. இதனால், என்னால் எந்த பணத்தையும் சேமிக்க முடியவில்லை. நிறைய இழந்தேன். என்னுடைய மூத்த மகளின் பெயர் ஜோதி. அதனால் அவளது பெயரையே கடைக்கு வைத்துவிட்டோம்.

50 வருடங்களாக எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜோதி ஸ்டோர்ஸ் எனும் கடையை திறந்து, உழைப்பை கொட்டி, அதற்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்து எனது மகன் ராஜ்குமார் சந்திராவிடம் கொடுத்துவிட்டேன். அவர் அதனை இன்னும் பலமடங்கு பெரிதாக்கி உலகம் முழுவதும் தெரியும்படி செய்துவிட்டார்.
இன்னாரது மகன் என்ற அடையாளத்துடன் இருந்த அவர், இப்போது இன்னாரது தந்தை என்ற அடையாளத்தை எனக்கு கொடுக்கும் அளவுக்கு பெயரும், பெருமையும் பெற்றுவிட்டார். நான் படிக்கவில்லை. ஆனால், அவரை நன்றாக படிக்க வைத்தேன். இதனால், அவர் தொழிலை பல மடங்கு லாபகரமானதாக மாற்றிவிட்டார்” என்றார் பெருமிதத்தோடு.

சிங்கப்பூரில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் Jothi Store மற்றும் Flower Shop பற்றி சிங்கையில் தெரியாத ஆளே இன்று இருக்க முடியாது. இந்தியாவில் கூட ஒரு கடைக்கு 10 கடை ஏறி இறங்கி வாங்க வேண்டிய பொருளை, சிங்கப்பூரின் ஜோதி ஸ்டோர்ஸ் எனும் ஒரே கடையில் வாங்கிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு இங்கு இல்லாத பொருட்களே இல்லை எனலாம்.

அதுமட்டுமின்றி, சிங்கப்பூரின் LiSHA அமைப்பிற்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் தலைவராக இருக்கும் பெருமையும் ராஜகுமார் சந்திராவுக்கு உண்டு. சிங்கப்பூர் அரசின் தேசிய விருது முதல் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். தமிழர்களுடன் கைக்கோர்த்து லிட்டில் இந்தியாவை சிறப்பானதொரு இடமாக மாற்றிய பெருமையும் இவருக்கே உண்டு.
தந்தை தொடங்கிய வணிகத்தை ஒரு சாம்ராஜ்யமாக உருமாற்றி இன்று சிங்கப்பூரின் அசைக்க முடியாத ஆளுமைகளாக வலம் வரும் ராமச்சந்திர முருகையா மற்றும் அவரது மகன் ராஜ்குமார் சந்திரா ஆகிய இருவரையும் கொண்டாடுவதில் “தமிழ் சாகா சிங்கப்பூர்” நிறுவனம் பெருமை கொள்கிறது.