TamilSaaga

‘நபிகள் மேல் கைவைத்த நுபுர்’… இந்தியாவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமிய நாடுகள் – தயவு பார்க்காமல் ஆக்ஷன் எடுத்த பாஜக!

சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு புகழ்பெற்றவர் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா. அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அவரது பேச்சு வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. மகாராஷ்டிராவில் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் பேச்சு அரபு நாடுகளில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள சமூக ஊடகங்களில் இதைப்பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது. குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

அதுமட்டுமின்றி, இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கத்தாரில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, மால்கள் பலவற்றில் இந்தியாவில் இருந்து வந்த பொருட்கள் துணி போட்டு மூடப்பட்டு, அதை புறக்கணிக்க வேண்டும் என்றும் நோட்டிஸ் ஒட்டப்பட்டது.

மேலும் படிக்க – “லாரன்ஸ் வோங் எனும் நான்…” சிங்கப்பூரின் புதிய துணை பிரதமராக பதவியேற்கும் “சிம்மக்குரலோன்” – 50 லட்சம் மக்களின் “பேராதரவு” குரல்

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குவைத் அரசு, இந்தியா இதற்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு பதிலளித்த இந்திய அரசு, “இது இந்திய அரசின் கருத்து கிடையாது” என்றது.

விஷயம் விபரீதமாக பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், “மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது. தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது” என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர்.

மற்றொரு பக்கம், கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மீட்டலிடம் கத்தார் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு கத்தார் வெளியுறவுத்துறை அளித்த சம்மனில், இஸ்லாமியர்களை கோபம் அடைய செய்யும் வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினரை ஆளும் இந்திய அரசு நீக்கியதை வரவேற்கிறோம். அதே சமயம், இந்திய அரசாங்கம் , சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடி கண்டனத்தை வெளியிட வேண்டும். இது போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துவிட்டு, எந்த தண்டனையும் இல்லாமல் ஒருவர் இருப்பது, மிகப்பெரிய மனித உரிமை மீறலை உங்கள் நாட்டில் ஏற்படுத்தும். அதோடு ஏற்கனவே உங்கள் நாட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களை மேலும் ஒதுக்க, அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த இது வழி வகுக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டது.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்றிருந்த நிலையில், இந்த சம்மன் வந்தது பெரிய சர்ச்சையானது. இதையடுத்து, பாஜக சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், “பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது, எந்த மதத்தை சேர்ந்த தலைவர்களையும் விமர்சிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது” என்று தெரிவித்தது.

இந்த நிலையில்தான் கத்தாரின் சம்மனுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், “சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது தனி நபர்கள்தான். இந்த கருத்துக்கள் எதுவும், எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்கள் கிடையாது” என்று விளக்கம் அளித்தது.

கத்தாரைத் தொடர்ந்து இதே விளக்கத்தை கேட்டு ஈரான், குவைத் இந்தியாவிற்கு சம்மன் அனுப்பி உள்ளன. இவை எல்லாம் இந்தியாவின் நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts