இந்த ஏற்றத்தாழ்வு என்ற வார்த்தை இருக்கிறதே… அது மிக மிக மோசமானது. கொடுமையானது. உயர்வு, தாழ்வு என்று இரு வரையறைக்குள் சிக்கி மனிதன் தினம் தினம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்.
நீ உயர்ந்தவன்… நீ தாழ்ந்தவன் என்று பிரிக்கும் பொழுதே, நியாய தர்மங்கள் ஒவ்வொரு ஆளுக்கு ஒவ்வொரு மாதிரியாக மாறிவிடுகின்றன. அங்கே நீதிக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. சரி… உள்ளூரில் தான் இந்த ஏற்றத்தாழ்வு என்றால், பஞ்சம் பிழைக்க வெளிநாடு சென்றாலும் அங்கேயும் இந்த ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
நமது சிங்கப்பூரில் எண்ணற்ற… அதாவது லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் வந்து வேலை பார்க்கின்றனர். குறிப்பாக, சீனர்கள், மலேசியர்களுக்கு அடுத்தபடியாக இங்கு ஆதிக்கம் செலுத்துவது தமிழக ஊழியர்களே. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வேலை பார்க்கின்றனர்.
கடல் கடந்து வந்து வாழும் இடத்தில் தமிழக ஊழியர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது எந்தளவுக்கு நிஜமோ, அந்த அளவுக்கு சில பாகுபாடுகளும் இந்த காட்டப்படுகிறது என்பது உண்மை தான். சில ஊழியர்கள் அதாவது S pass அல்லது E pass-ல் பணிபுரிபவர்களின் நட்பு வட்டாரத்தில் 90 சதவிகிதம் பேர் அதே S pass, E pass கேட்டகிரியில் உள்ளவர்கள் தான் இருக்கின்றனர். அவர்கள் work permit ஊழியர்களிடம் அதிகம் நட்பு பாராட்டுவதில்லை என்று கூறலாம்.
அதற்காக சுத்தமாக இவர் work permit ஊழியர்களிடம் பழகுவதில்லை, நண்பர்களாக இருப்பதில்லை என்று கூற முடியாது. ஆனால், சிலர் அப்படி பாகுபாடு காட்டுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
அதேபோல், work permit-ல் பணிபுரியும் ஊழியர்களின் கேங்கில் S pass, E pass-ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இருப்பது மிக மிக குறைவு தான். ஒரு படத்துக்கு போவதாக இருந்தாலும் சரி… பீச்சுக்கு போவதாக இருந்தாலும் சரி… வெளியில் ரிலாக்சாக ஊர் சுற்ற செல்வதாக இருந்தாலும் சரி… work permit ஊழியர்கள், சக work permit ஊழியர்களுடன் தான் செல்கின்றனர். S pass-ல் இருப்பவர்கள் சக s pass ஊழியர்களுடன் தான் செல்கின்றனர்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், இப்போது ஒரு ஷாப்பிங் மாலில் S pass அல்லது e pass ஊழியர்கள் வந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதே மாலுக்கு work permit ஊழியர்களும் வந்திருப்பார்கள். ஆனாலும் மேற்சொன்ன நபர்கள், work permit ஊழியர்களிடம் தமிழர்கள் என்று தெரிந்தும் பேசக் கூட மாட்டார்கள். ஏதோ, அவர்கள் இங்கிலாந்தில் இருந்தோ, அமெரிக்காவில் இருந்தோ வந்தவர்கள் போல் நடந்து கொள்ளும் அனுபவத்தை நிச்சயம், இந்த செய்தியை படிக்கும் பலர் அனுபவித்து இருப்பார்கள்.
இவர்களை விட PR வாங்கியவர்கள் சேட்டை இன்னும் உச்சத்தில் இருக்கும். அவர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போலவே பேசுவார்கள். ஆங்கிலத்தில் மட்டும் தான் பேசுவார்கள். சக தமிழர்களை கண்டால்… “தமிழ்நாடு எங்கே இருக்கிறது?” என்ற மோடில் தான் நடந்து கொள்வார்கள்.
ஆனால், எல்லோரும் அப்படி இருப்பதில்லை. சிலர் மட்டுமே அவ்வாறு நடந்து கொள்கின்றனர். குடும்பத்தை விட்டு கடல் கடந்து, நாடு கடந்து வசிக்கும் நாம் இந்த ஏற்றத்தாழ்வை அகற்றி, கொஞ்சமாவது நாம் அனைவரும் ஒன்றுதான் என்ற உணர்வோடு இருக்க முயற்சி செய்வோம்.
இந்த கட்டுரையில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் தாராளமாக உங்கள் கருத்துக்களை comment-ல் தெரிவியுங்கள்.