TamilSaaga

“மனசாட்சியை வித்துட்டு காசு வாங்காதீங்க.. உங்களுக்கும் குடும்பம் இருக்கும்! எங்க வயித்தெரிச்சல் கொட்டிக்காதீங்க!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல வேண்டுமெனில், எத்தனையோ Job Portals இருந்தாலும், பெரும்பாலானோர் தேடிச் செல்வது ஏஜெண்ட்டுகளை மட்டும் தான். தேடிச் செல்வது என்று சொல்வதை விட, நம்பிச் செல்கிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

எத்தனையோ ஏஜெண்ட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ளனர். அதில் நிறைய பேர் வாங்கும் பணத்திற்கு நியாயமுடன் செயல்பட்டு வருகின்றனர், இன்னமும்!. ஆனால், இந்த தொழிலில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பணம் என்பதை மட்டும் பிரதானமாக வைத்துக் கொள்வது தான் பிரச்சனையே.

அந்த வகையில், சிங்கப்பூர் செல்ல ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுத்து, அதை வாங்க 1 வருடமாக இருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு, அலைந்து திரிந்து நொந்து போன ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நமது தமிழ் சாகா நிறுவனத்திடம் அளித்த பிரத்யேக பேட்டி இங்கே..

“வணக்கம்.. எனக்கு கோர்வையா பேசத் தெரியாது.. அதுனால சுருக்கமா சொல்ல முடிச்சுடுறேன்.. நான் சொல்றதை கேட்டு நாலு பேர் உஷாரா இருந்து பணத்தை இழக்காம இருந்தா, அதுவே போதும். நான் கடந்த 2016ம் ஆண்டு திண்டுக்கல்லில் உள்ள ஏஜெண்ட் ஒருத்தருக்கு சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்ய 2 லட்சம் கொடுத்தேன். எப்படியாவது வேலை கிடைச்சிடனும்-ங்குற ஆர்வத்துல முன்கூட்டியே இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

அந்த ஏஜென்ட்டு, அவரோட ஆபீஸ் மூடிட்டு எங்கேயும் ஓடல. ஓடி ஒளியல. ஆனா, வேலையை மட்டும் எனக்கு வாங்கித் தரவே இல்ல. விசா இப்போ வந்துடும், அப்போ வந்துடும்-னு சொல்லி கிட்டத்தட்ட ஒரு வருஷம் இழுத்தடிச்சார். அவர் கால விழாத குறையா, பணத்தை திரும்பக் கேட்டு கெஞ்சிப் பார்த்தேன். வேலையும் கிடைக்கல, பணமும் வரல. அவரும் எங்கயும் தலைமறைவாகல.

“நான் இங்க தானே சார் இருக்கேன். இதே ஊருல, இதே ஆபீஸ்ல தானே இருக்கேன்-னு சொல்லி சொல்லி ஒருவருஷம் என்னை அலைக்கழிச்சார். நான் வட்டிக்கு பணத்தை வாங்கிக் கொடுத்திட்டு, வேலைக்கும் போக முடியாம அந்த ஒரு வருஷம் வட்டிக் கட்டினேன். நான் செய்த மிகப்பெரிய 2 தவறு,

ஆர்டர் கிடைப்பதற்கு முன்னாடியே 2 லட்சம் பணத்தை கொடுத்தது,

அதை வட்டிக்கு வாங்கிக் கொடுத்தது.

போலீஸ்-ல சொல்வேன்னு சொன்னதுக்கு அந்த ஏஜென்ட் பயப்படல.. முகத்துல எந்த சலனத்தையும் காட்டாம, ‘அப்படி என் மேல நம்பிக்கை இல்லனா, தாராளமா போய் போலீஸ் ஸ்டேஷன்-ல கம்ப்ளைண்ட் கொடுங்க”-னு சொன்னார். நல்லா பேசுவாரு.. ஆனா வேலையும் வாங்கித் தர மாட்டார்.. பணத்தையும் திருப்பிக் கொடுக்க மாட்டாரு. அவரோட சண்டையும் போட முடியல.. போலீஸுக்கும் அவர் பயப்படல. ஒருக்கட்டத்துல தற்கொலை பண்ணிக்கலாம்-னு கூட தோணுச்சு. துணிஞ்சு தற்கொலை பண்ணிக்கவும் இறங்கிட்டேன். ஆனால், என் பிள்ளைங்க முகம் என்னை சாக விடாம பண்ணிடுச்சு.

பிறகு தான் தெரிஞ்சுது, அந்த ஆளு என்ன மாதிரி பல பேரிடம் பணத்தை வாங்கி, அதை வட்டிக்கு விட்டு சம்பாதிச்சு வந்திருக்கார். ஆனா, தன் பேருல எந்த சந்தேகமும் வந்துடக் கூடாது என்பதால, 30 பேரு கிட்ட பணம் வாங்கினா, அதுல 3 பேருக்கு மட்டும் சிங்கப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மத்தவங்ககிட்ட பணத்தை வாங்கி, வேலை வாங்கித்தராமல் இழுத்தடிச்சு, அதை வட்டிக்கு விட்டு லாபம் பார்த்து, ஒரு வருஷம் கழிச்சு, அவங்க கொடுத்த பணத்தை நல்லவர் போல திருப்பிக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

பணத்தை திருப்பிக் கொடுத்துடறதுனால யாரும் அவரு மேல பெருசா புகார் கொடுக்குறதுல. அப்படி புகார் கொடுத்தாலும், அவர் பணத்தை திருப்பி தந்துறதுனால அதை வாபஸ் வாங்கிக்குறாங்க. ஆனா, அந்த ஆளு எங்ககிட்ட பணத்தை வாங்கி வட்டிக்கு விட்டு, அதுல ஒரு லாபம் பார்த்து, எங்களை நாயா அலைய விட்டு, கடைசியில் நல்ல பிள்ளை மாதிரி, பணத்தை திருப்பிக் கொடுத்து சம்பாரிச்சு வந்தார்.

இப்படி எங்களை ஏமாத்துன எங்க அத்தனை பேரோட வயித்தெரிச்சலையும் அந்த ஆளு கொட்டிக்கிட்டார். அவருக்கும் குடும்பம் இருக்கும் தானே.. பிள்ளைங்க இருக்கும் தானே.. எங்க வயித்தெரிச்சல் அவர்களை கேட்கும் தானே!” என்று வேதனையுடன் தனது பதிவை முடித்துக் கொண்டார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts