S Pass… சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல முயற்சி செய்பவர்களில் 99% பேர் முக்கியத்துவம் கொடுக்கும் பாஸ் இது. ஏஜெண்டுகளிடம் ‘எப்படியாவது எனக்கு S Pass வாங்கிக் கொடுத்துடுங்க’ என்று சொல்லாதவர்களே இருக்க முடியாது.
இன்னும் சிலரோ, ‘சார்.. நான் 4 லட்சம் கூட கொடுக்குறேன்.. எப்படியாவது S Pass-ல் என்னை சிங்கப்பூர் அனுப்பிடுங்க’ என்று பணத்தை வாரி இறைத்தாவது அந்த பாஸை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் இன்றைய சூழலில், நிலைமையே வேறு. இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த சூழல் கூட இப்போது கிடையாது. அதாவது, நீங்கள் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் கூட S-Pass வாங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமாக இப்போது இருப்பதில்லை.
காரணம்.. சிங்கப்பூர் அரசு தான். S Pass கோட்டாவை சிங்கை அரசு வெகுவாக குறைத்துவிட்டது. Manufacturing, Construction, Marine Shipyard, Process ஆகிய செக்டர்களில் கடந்த ஆண்டு 18% இருந்த total workforce இந்த 2023 முதல் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளதே இதற்கு சாட்சி. அதேசமயம், Services துறையில் எந்த மாற்றமும் இல்லை.
இது ஒருபக்கம் இருக்க, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தற்போது எளிதாக S-Pass கிடைக்கிறது என்றும், டிப்ளமோ படித்தவர்களுக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை என்றும் ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. அதாவது வடிவேலு காமெடியில் வரும் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் டா’ என்பது போல் இந்த தகவல் பரவி வருகிறது.
உண்மையில், அப்படி எதுவும் கிடையாது. சிங்கப்பூரில் உங்களுக்கு குறைந்தபட்சம் 3000 டாலருக்கு ஊதியம் கொடுக்க எந்த நிறுவனம் முன்வந்தாலும், உங்களுக்கு S Pass நிச்சயம் கிடைக்கும். அதற்கு நீங்கள் இன்ஜினியரிங் படித்திருந்தாலும் சரி.. டிப்ளமோ முடித்திருந்தாலும் சரி.. கம்பெனி உங்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளம் தான் இங்கு முக்கியமான ஆவணம்.
ஸோ, தேவையில்லாத தகவல்களை நம்ப வேண்டாம். அதேசமயம் இன்னொரு முக்கிய தகவலையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வரும் செப்டம்பர் 1, 2023 முதல், S PASS-க்கு நீங்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமெனில், கம்பெனி உங்களுக்கு குறைந்தபட்சம் $3000 டாலர்கள் சம்பளமாக நிர்ணயித்திருக்க வேண்டும். இப்போது சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள், தங்களது S-Pass-ஐ ரெனீவல் செய்ய விரும்பினாலும், 3000 டாலர்கள் அடிப்படை சம்பளம் என்பது அவசியமாகிறது.