வேலை வாய்ப்பு விசா வைத்திருப்பவர்கள் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து சிறப்பு விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவில் இருந்து யாரும் அமீரகத்திற்கு செல்லமுடியாத நிலை உள்ளது.
ஆனால் அமீரகத்தில் இருந்து இந்தியர்கள் இங்கு வர முடியும். இதனைத்தொடர்ந்து தொழில் மற்றும் வேலைநிமித்தமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல முடியாத நிலை தற்போது நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று 23.6.2021 புதன்கிழமை முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரக வேலை வாய்ப்பு விசா வைத்துள்ளோர் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் அவ்வாறு வேலை வாய்ப்பு விசா வைத்திருப்போர் ஐக்கிய அரபு அமீரகம் அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசிகளான பைஜர், ஸ்புட்னிக், ஆஸ்ட்ராஜெனகா, சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் ஐக்கிய அரபு அமீரக விமானநிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த பரிசோதனையின் முடிவு 24 மணிநேரத்திற்குள் வரும், அதுவரை பயணி தனிமைப்படுத்துதலில் இருத்தல் வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த சலுகை குறித்து பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.