சிங்கப்பூரில் 51 முதல் 1000 நபர்கள் வரை பங்கேற்கும் வணிக நிறுவனங்களின் வேலை தொடர்பான பெரிய நிகழ்வுகளை அனுமதித்துள்ளது சிங்கப்பூர் அரசு. வரும் ஜனவரி 3ம் தேதி முதல் வணிக நிறுவனங்கள் இந்த நடைமுறையை பயன்படுத்தலாம். இது அந்த நிகழ்வில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது அல்லது நிற்பது போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சியில், உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது போன்ற முகமூடிகள் அற்ற நடவடிக்கைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) நேற்று சனிக்கிழமை (ஜனவரி 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பங்கேற்பாளர்கள் முகமூடி அணிந்து அமர்ந்திருக்கும் நிகழ்வுகளுக்கான அளவை உயர்த்துவதாக சிங்கப்பூர் கோவிட்-19 பல அமைச்சக பணிக்குழு கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி, வேலை தொடர்பான நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். வரும் திங்கள்கிழமை ஜனவரி 3 முதல், இது போன்ற பெரிய நிகழ்வுகள் அனுமதிக்கப்படுகின்றன – ஆனால் உணவு மற்றும் பானங்கள் உட்கொள்ள அனுமதி இல்லை.
பங்கேற்பாளர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 1 மீ தூரத்தை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தலா 100 பேர் வரை இருக்கும் ஒரு zone மற்றொரு zoneல் இருந்து 2 மீ தூரத்தில் இருக்க வேண்டும். கூடுதலாக, அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும், கடந்த 180 நாட்களுக்குள் COVID-19-லிருந்து மீண்டிருக்க வேண்டும் அல்லது தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்களாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துபவர்கள், நிகழ்வுக்கு முன் ஆன்லைனில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் மற்றும் நிகழ்வுப் பயணம் மற்றும் தரைத் திட்டம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.