சிங்கப்பூரில் பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் ஒரு பெண், தன் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்காதபடி ஒரு போலீஸ்காரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. சென் யுவான்யுவான் என்ற அந்த 28 வயது பெண் பொது இடத்தில் குடிபோதையில் இருந்தபோது, இரண்டு அதிகாரிகளின் கால்களை உதைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த சீனப் பிரஜை இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 7) நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இதில் ஒரு பொது ஊழியருக்கு தானாக முன்வந்து காயப்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகள் அடங்கும்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் மேலும் இரண்டு தற்காலிக பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 8ம் தேதி அந்த பெண் பொது இடத்தில் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணை அணுகிய இரண்டு போலீஸ்காரர்களை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
பிறகு கடந்த பிப்ரவரி 24 அன்று, பெமிம்பின் டிரைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எட்டுக்கும் மேற்பட்டவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வசிக்கும் இடத்தை விட்டு பெருந்தொற்று விதிமுறைகளை மீறி சென்றுள்ளார். நள்ளிரவு தாண்டியபோது, 14 பேருடன் சீனப் புத்தாண்டை அபார்ட்மெண்டில் அவர் கொண்டாடியபோது காவல்துறையினர் அவரை பிடித்தனர். தன் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒரு போலீஸ்காரருக்கு சென் 100 வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த அதிகாரி லஞ்சத்தை நிராகரித்து, வழக்கை ஊழல் நடைமுறைகள் புலனாய்வு பணியகத்திற்கு (CPPI) பரிந்துரை செய்துள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 1,00,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.