சிங்கப்பூரில் பல பேர் ஊர் விட்டு ஊர் வந்து கட்டிட வேலை பார்க்கிறார்கள். சிலருக்கு சாதாரண வேலை சிலருக்கு உயரங்கள், பெரிய பெரிய குழிகள் போன்ற ஆபத்தான வேலை. எந்த வேலையாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஒருவரை நம்பி ஊரில் ஒரு குடும்பமே இருக்கும். அண்ணனோ, தம்பியோ, அப்பாவோ, கணவரோ உங்களை எதிர்பார்த்து காத்திருக்க உறவுகள் பல ஊரில் உள்ளது. இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வது முக்கியம்.
கட்டிடம், கப்பல் வேலை போன்றவற்றில் விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று, உண்மை தான்! ஆனால் பாதுகாப்பு நம் பொறுப்பு! நம்மை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனத்தின் பொறுப்பு!
இதுபோன்ற ஆபத்தான வேளைகளில் இருப்பவர்களை தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிய சூழ்நிலைகள், உபகரணங்கள், வேளைகளில் கவனம் போன்றவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியம்.
சென்ற மாதம் கூட Johor Bahru- RTS Link சாலை இணைப்பில் பணிபுரிந்த இரு பணியாளர்கள் மீது இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் இறந்தும் போனார். அவர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பது புதிதல்ல. எனவே கவனமுடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
மேற்கண்ட செய்தி நமது தமிழ் சாகா முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதற்க்கு வாசகர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் சில கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன! அவை பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
முதலில் தொழிலாளர்கள் சார்பில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளாக நமது வாசகர்கள் எழுதியது!
- குடும்ப சூழ்நிலைகளை மனதில் போட்டு அழுத்திக் கொள்ளும் தொழிலாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே தொழிலாளர்கள் இயன்றவரை குடும்ப பிரச்சனைகளைப் பற்றி யோசிக்காமல் கவனம்டன் வேலைத்தளங்களில் செயல்பட வேண்டும்.
- வேலை நேரங்களில் கவனக்குறைவை ஏற்படுத்தும் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு மொபைல் பயன்படுத்துவது, தேவையற்ற பேச்சுகள், யோசனைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- கொடுக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பராமரித்து, அதனை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாமல் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.
- முறையான பாதுகாப்பு பயிற்சிகள் இல்லாமல் ஒரு வேலையை செய்யக்கூடாது.
- வேலை அழுத்தம் காரணமாக எந்தவொரு வேலையையும் அவசரமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செய்யக்கூடாது.
- வேலைத் தளங்களில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை supervisor-இடமோ அல்லது நிறுவனத்திடமோ உடனே தெரிவிக்க வேண்டும். குறிப்பாக பயன்படுத்தும் உபகரணங்கள், பாதுகாப்பு அமைப்புகள் போன்றவற்றில் பழுதுகள் இருப்பின் உடனடியாக அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
மேற்கண்ட குறிப்புக்கள் யாவும் தொழிலாளர்கள் கடைபிடித்தால் இயன்றவரை விபத்துகளை குறைக்கலாம். விபத்து ஏற்படினும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக நிறுவனங்கள் செய்ய வேண்டிய கடமைகள்:
- உரிய பாதுகாப்பு உபகரணங்களை தொழிலார்களுக்கு வழங்குவது.
- சரியான பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வழிகாட்டுதலை தொழிலாளர்களுக்கு அமைத்துத் தர வேண்டும்.
- முறையான பாதுகாப்பு பயிற்சிகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். வேலை தெரியாத தொழிலாளர்களுக்கு புதிய வேலையைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- வேலை அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதன் காரணமாக பல விபத்துகள் நடைபெறுவதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர். அவசரமாக செய்யப்படும் வேலையில் கவனக்குறைவு இருக்கும் அது பல்வேறு விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
- ஒரு இடத்தில வேலை துவங்கும் முன்னர் அந்த வேலைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இடத்தை முறையாக சோதனை செய்த பிறகே வேலையைத் துவங்க வேண்டும்.
- தொழிலாளிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் எந்த அழுத்தமும் இன்றி அவர்கள் வேலை செய்வார்கள்.
இயன்றவரை விபத்துகள் ஏற்படாமல் கவனமாகவும் அதையும் மீறி நடக்கும் பட்சத்தில் நம் பாதுகாப்பு நம் பொறுப்பு என்பதை உணர்ந்து தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டும். நிறுவனங்களும் அவர்களை சரியான முறையில் நடத்தி வேலை செய்ய வைக்க வேண்டும். இயன்றவரை அனைத்தையும் பின்பற்றி விபத்துகளற்ற வேலைத்தளத்தை உருவாக்குவோம்!