TamilSaaga

சிங்கப்பூரில் தமிழர் பெருமையை பறைசாற்றிய “புதுவை பிரதர்ஸ் கபடி குழு”… சிங்கப்பூர் அணியுடன் போட்டியிட்டு வென்று கப்பை தட்டி தூக்கினர்!

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு தமிழர்கள் மற்றும் சிங்கப்பூர் மக்களுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் ரெட் டாட் ஸ்போர்ட்ஸ் பியஸ்டா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. சிங்கப்பூரின் 58வது பிறந்தநாள் மற்றும் சிங்கப்பூர் இந்திய சங்கத்தின் 100 ஆவது பிறந்த கொண்டாடும் வகையில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் குடிமக்கள், PR மற்றும் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.கபடி, ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற பலவிதமான விளையாட்டுகள் அரங்கேறின. இது குறித்து இந்திய சங்கத்தின் தலைவர் திரு தமிழ்மாறன் அவர்கள் கூறுகையில், நம் தமிழ்நாட்டின் பாரம்பர விளையாட்டான கபடி விளையாட்டை உலக அளவிற்கு கொண்டு செல்வதற்கு, அந்த விளையாட்டில் கவனம் செலுத்தியுள்ளோம் என்று கூறினார்.

மேலும் சிலம்பாட்டம், யோகா போன்ற இந்திய நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் போட்டிகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். இம்முறை நடைபெற்ற கபடி போட்டியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கபடி குழுவும், உள்ளூர் கபடி குழுவும் நேருக்கு நேராக போட்டியிட்டன. இந்த ஆட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவான புதுகை பிரதர்ஸ் கபடி குழு போட்டியினை வென்று கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.

20 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் வசித்து வரும் திரு விஜயபாலன் அவர்கள் கபடி குழுவிற்கு பயிற்சியாளராக உள்ளார். இது குறித்து இவர் கூறும் பொழுது, கபடி போன்ற போட்டிகள் நடத்துவதன் விளைவாக வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கும், உள்ளூரில் வாழும் சிங்கப்பூர் மக்களுக்கும் இடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் நோக்கில் போட்டிகள் நடத்தப்பட்டதாக கூறினார். இப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுகை குழு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

Related posts