தமிழகத்தின் விருத்தாசலத்தில் மணிமுத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் தியாக இரமேஷ். தற்போது இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு மிகச்சிறந்த இலக்கியவாதியும்கூட.
இந்நிலையில், தியாக இரமேஷின் கவிதையானது இங்கு சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி உயர்தமிழ் வகுப்பு 2A தமிழ் பாடநூலில் இடம் பெற்றுள்ளது. இவரது படைப்பு பாடப்புத்தகத்தில்.. அதுவும் சிங்கப்பூர் பாடநூலில் இடம் பெற்றிருப்பது அவர் சார்ந்த விருத்தாசலம் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தியாக இரமேஷ், விருத்தாசலத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1986ம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்தார், பிறகு, 1990ம் ஆண்டு சேலத்தில் உள்ள ராஜாஜி தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்றார்.
மேலும் படிக்க- “சிங்கப்பூர் Bionix வழக்கில் கொல்லப்பட்ட NSF அதிகாரி”
தற்போது 10 ஆண்டுகளுக்கு மேல் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று பணியாற்றி வருகிறார். தனது வேலையைத் தவிர்த்து, கவிதை, இலக்கியம் என்று சிங்கை இலக்கிய வெளியில் ரமேஷ் மிகத்தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

சிங்கப்பூரில் கவிதைக்கென்றே இயங்கும் “கவிமாலை” அமைப்பில் துணைச் செயலாளராகவும், தற்போது செயலவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் போன்ற பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தொண்டாற்றி வருகிறார்.
தியாக இரமேஷ் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்பும், ஒரு பொன்விழா மலரையும் வெளியிட்டு, பல உயரிய விருதுகளை வென்றுள்ளார். அவருடைய முதல் தொகுப்பான “அப்படியே இருந்திருக்கலாம்” தொகுப்பினை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் MPhil ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.