TamilSaaga

சிங்கப்பூர் தமிழ்த் தொழிலாளர்களை காலம் கைவிட்டு விடுமா என்ன?

மனிதரின் கட்டுப்பாட்டை மீறிய இயற்கை பேரிடர்களும், எதிர்க்கவோ தீர்க்கவோ முடியாத அழிவுகளும் வரலாறு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் தான் சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கிறது – அலைமேல் அலையாக பரவிக் கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்று பேரிடரும்.! பேரிடரோ, பேரழிவோ, பெருந்தொற்றோ எந்த ஒன்றாக இருந்தாலும் அது உண்டாக்கும் பாதிப்புக்கள், விதவிதமாக, பலவிதமாக பாதிக்கப்படுபவர்களின் வாழ்வையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும் ஒன்றாகத்தான் இருக்கிறது.!

இந்த பெருந்தொற்றும் அதற்கு விதிவிலக்கல்ல. தொற்று பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியவர்கள், மரணத்தின் வாசல் வரை சென்று விட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு திரும்பி வந்தவர்கள், உறவு ஒன்றை இழந்து விட்டு துடிப்பவர்கள், இழந்து விடுவோமோ என்னும் பயத்திலேயே பாதி மரணித்தவர்கள், இவையெல்லாம் போதாதென்று வேலை இழப்பு, ஏழ்மை, ஊரடங்கு, வீட்டிலிருந்தே வீணாய் போன ஒரு தலைமுறை, என கொரோனாவும் தன் வரலாற்று மிரட்டலை கச்சிதமாகவே செய்து கொண்டிருக்கிறது.

நெஞ்சை உருக்கும் இந்த பாதிப்புகளில் எல்லாம் இருந்து சற்று மாறுபட்டு, இன்னும் கொஞ்சம் உள்ளத்தை உருகவைக்கும் சூழல்தான் – குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு சென்று அங்கே தனித்து மாட்டிக்கொண்ட தமிழர்களும், அவர்களுக்காக தவிப்போடு காத்துக்கிடக்கும் குடும்பத்தினரின் சூழல்.

திரவியம் தேடி திரைகடல் ஓடும் தமிழர்கள், தொல்காப்பிய காலத்திலிருந்தே குடும்பத்தினரை பிரிந்து தனித்துப் போவதும், தவித்துக் கிடப்பதும், பொருளோடு வந்து குடும்பத்தினரை சந்திப்பதும் தான் வரலாறுகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மனைவி, பிள்ளைகள்,குடும்பத்தாரோடு செல்வது இன்றைக்கு ஓரளவு வளர்ந்து இருந்தாலும், நூற்றுக்கு 99 சதவிகிதம் சாதாரண வேலை தேடி சொல்வோரை பொறுத்தவரை தொல்காப்பியர் கால நிலைதான் இன்றும் தொடர்கிறது!.

மேலும் படிக்க – இந்தியரா இருந்தால் வீடு கிடையாதா?.. மெல்ல மெல்ல பின்வாங்கிய ஏஜெண்டுகள் – சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வீடு கொடுப்பதில் பாரபட்சமா?

இந்த சூழலில் உலகையே உலுக்கும் இதுபோன்ற பேரிடர்களை சந்திக்க நேரிடும் பிரிந்து கிடக்கும் குடும்ப உறவுகளின் நிலை உண்மையிலேயே வலி நிறைந்தது தான்.! அப்படி நாடு விட்டு நாடு சென்று தனித்து மாட்டிக்கொண்டவர்களைப் பற்றி பதிவு செய்வது மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்! அதிலும் குறிப்பாக இந்த பக்கத்தில், பின்வரும் சில பத்திகளில் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் கடந்துவந்த, கடந்து கொண்டிருக்கும் நிலையில் மிகச் சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.!

சிங்கப்பூர்..!

செப்டம்பர் 10 ,2021 வரை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகால பெருந்தொற்று பரவல் காலத்தில் 70,612 பேர் பாதிக்கப்பட, 58 பேரின் மரணத்தோடும், தினசரி பாதிக்கப்படுபவர்களின் ஏற்ற இறக்க எண்ணிக்கைகளோடும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. அதிலும் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது தான் நிலையை இன்னும் சற்று அழுத்தம் ஆகிவிட்டது .

சிங்கப்பூர் செல்லும் ஆண்கள் பெரும்பாலும் 5 அல்லது 6 பேர் (15,17 வரை எண்ணிக்கை நீள்வது உண்டு) சிறு சிறு அறைகளை வாடகைக்கு எடுத்து நகர்ப்புறங்களுக்கு வெளியில் உள்ள ‘புங்கோல்’ போன்ற பகுதிகளின் வளாகங்களில் தங்கி பணிக்கு செல்கின்றனர். காலை, மாலை, இரவு பணிகள் என பணி நேரம் மாறுபடுவதால் அதிக எண்ணிக்கையில் ஒரே அறையில் தங்கி இருப்பது அவர்களுக்கு பெரிய இடர் ஒன்றும் இல்லை என்றாலும், ஊரடங்கு காலத்தில் ,குறிப்பாக 2020 ஏப்ரல் மாத வாக்கில் கொரோனா முதல் அலை வேகமாக உச்சத்தை தொட்டு கொண்டிருந்தபோது சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டிருந்த 4000 பேரில் 90% பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்ற நிலையில் ஆரம்பித்தது கெடுபிடிகள்!.

ஆனாலும் கூட அந்த கெடுபிடிகளையும் தாண்டி 2020ம் ஆண்டின் இறுதியில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையில் 47% வெளிநாட்டு தொழிலாளர்கள் என்ற நிலை வரும் வரையில் தொற்றின் வேகம் ராக்கெட்டின் வேகம்தான்.! விளைவு தங்கும் இடங்களிலேயே தங்கவைக்கப்பட்டனர் வைக்கப்பட்டனர் தொழிலாளர்கள். அறைக்கே வந்து உணவு வழங்குவது, காலையும் மாலையும் வெப்ப நிலை பரிசோதிப்பது, அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவது என உதவிகள் செய்யப்பட்டாலும் கூட, (அதுவும் எல்லாருக்கும் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது என்னும் படியான பதிவுகளும் இருக்கத்தான் செய்கின்றன) வருமானம் தேடி வந்த இடத்தில், வேலைக்கும் போக முடியாமல், குடும்பத்தினருடனும் இருக்க முடியாமல், அதிக எண்ணிக்கையிலான நபர்களோடு, ஒற்றை அறையில் அடைந்து கொண்டிருப்பது நரகத்தின் வாசல் போலவே இருந்ததாக நண்பர்கள் பகிர்ந்து, கேட்கும் போது உண்மையிலேயே கற்பனை கூட செய்ய முடியாத ஒன்றாகவே தோன்றியது எனக்கு.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னொரு புறமோ வேறு விதமான கருத்துக்களையும், அங்கு பணிபுரியும் நம் தமிழ் சொந்தங்கள் பதிவு செய்திருப்பதை பரவலாக காண முடிந்தது. பல்வேறு மொழி, கலாச்சார, நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூர், வெளிநாட்டு தொழிலாளர்களிடம் மிகச் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வேலையின்றி தங்குமிடங்களில் தவித்துக்கொண்டிருந்த தமிழர்களின் தேவைகளை இயன்றவரை சிறப்பாக நிறைவேற்றியது, தடுப்பூசி போடுவதற்கு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கியது, தாய்நாடு திரும்ப விரும்பிய தமிழர்களுக்கு உதவியது, போன்றவற்றை சிறப்பாக செய்தது ஆளும் அரசு மீது மக்களிடமும் குறிப்பாக வெளிநாட்டு தமிழர்களிடம் நற்பெயரை பெற்றுத் தந்து இருப்பதாகவே கருதுகின்றனர் ஒரு சாரார்.

பெருந்தொற்றுப் பரவல் அச்சத்தையும் மீறி சிறப்பாக நடைபெற்ற தைப்பூச விழா!, கிருமித்தொற்று சந்தேகத்தின் பேரில் 14 நாட்கள் தனிமைப்படுத்த தொழிலாளர்களுக்கு, அந்தக் காலகட்டத்திற்குரிய ஊதியத்தை அரசாங்கமே வழங்கி விடுவது!, போன்றவற்றையும் சிறப்புகளாக எடுத்துக் காட்டுகின்றனர்.
என்னதான் பொதுவான நல்லது கெட்டதுகளை எடுத்துக் காட்டினாலும், ஆராய்ந்து பார்த்தாலும், ஒரு தனி மனிதரின் மனநிலையில் இந்த சூழல் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை கண்டிப்பாக உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

● எட்டுக்கு எட்டு அறை, அதில் எட்டுப் பேர்!
● வருமானம் தேடி போன இடத்தில் வாழ வழியில்லை!
● நம்பியிருக்கும் குடும்பத்தாரின் நிலை என்னவாகும்?
● உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட உடனிருந்து எடுத்துச் செய்ய ஆள் இல்லையே?
● மருத்துவத் தேவைக்கு பணத்துக்கு என்ன செய்வார்கள்?
● பிள்ளைகள் எல்லாம் பத்திரமாக இருப்பார்களா?
● இங்கே இந்த நாட்டில் எனக்கு என்ன ஆகும்? மரணமே என்றாலும் குடும்பத்தினரோடு இருக்கும்போது மரணித்தால் மகிழ்ச்சியே!
● இந்த நாட்டிலாவது பரவாயில்லை! நம் மக்கள் வீட்டுக்கு வெளியில் வந்து விட்டால் சுத்தத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், காறித் துப்பி விட்டு அதன் மேலேயே நடந்து போவார்களே! நோய் பரவுமே! குடும்பம் பாதுகாப்பாக இருக்குமா?
● சூழல் நம் நாட்டில் இன்னும் என்னவாகும் ?
● உண்மையிலேயே குடும்பத்தாருக்கு தேவைப்படும் நேரத்தில் உடன் இருக்காமல் என்ன பிழைப்பு இது ?
என்று வேதனையோடு அங்கே சகோதரர்களின் கூட்டம் இயலாமையின் உச்சத்தில் விரக்தியோடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க…!!!
● இங்கே நானாவது நான் வாழும் எனது வீட்டுக்குள் பத்திரமாகத் தானே இருக்கிறேன், அங்கே அவர் எப்படி இருப்பார்?
● நாமெல்லாம் மூன்று வேளையும் சமைத்து உண்கிறோமே, அங்கே உணவுக்கு அவர் என்ன செய்கிறாரோ!
● அறியாத நாட்டில் அவருக்கு தோற்று வந்துவிட்டால் என்ன செய்வது?
● பத்திரமாக வந்து விடுவாரா? மறுமுறை அவரை எப்போது பார்ப்பது?
● நாங்கள் நலமோடு வாழத் தானே அவருக்கு இத்தனை வேதனை..!!
என்று உண்ணும் உணவு தொண்டையில் அடைத்துக் கொள்ள ,பரிதவித்து கிடக்கும் குடும்பத்தார்…
அய்யய்யோ…!!! அது அந்த தொற்றுநோயை விட, ஏன் மரணத்தை விடவுமே கொடுமை அல்லவா !?!

இதெல்லாம் எதற்கு? என தூக்கிப் போட்டு ஓடி வந்து விடவும் முடியாது. இப்படித்தான் சார்ஸ் நோய் வந்து உலகெல்லாம் பரவியபோது, சிங்கப்பூரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஊருக்கு ஓடி வந்த பல பேர், அதற்கு பிறகு இன்றும் கூட, நல்ல வேலையும் கிடைக்காமல், பார்த்த வேலைக்கு திரும்பியும் போகமுடியாமல் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன்.

என்னதான் பிரதமர் லீ, ‘சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பாதுகாப்பது எங்கள் தலையாய கடமை’, என்பது போன்ற அறிக்கைகளை கொடுத்து, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும்-

● வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் s-pass உள்ளிட்ட வேலைவாய்ப்பு அனுமதி நடைமுறைகளை கடினமாக்கி இருப்பதும்
● பெப்ரவரி 2020ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உற்பத்தித் துறையில் 2023குள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது 20%த்தில் இருந்து 15%மாக குறைக்கப்படும் என்று அறிவித்ததும்,
● இந்திய அளவில் ரூபாய் 2 லட்சம் (3323 டாலர்கள் வரை) வரை ஊதியம் பெறும் வெளிநாட்டு பணியாளர்கள் எண்ணிக்கையை 8.6% வரை குறைத்திருப்பது,
● சிங்கப்பூர் பூர்வகுடிகளின் எதிர்ப்புக் குரல்கள், போன்றவையும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பது தான் எதார்த்தமான, கசப்பான உண்மை !
இத்தனையும் தாண்டி, இருக்கும் வாய்ப்புகளில், கிடைக்கிற வேலைகளில், எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டு, கனவுகளை, கடமைகளை, நிறைவேற்ற போராடும் சிங்கப்பூர் தமிழ்த் தொழிலாளர்களை காலம் கைவிட்டு விடுமா என்ன?

நம்பிக்கையுடன்
உங்கள்
ஆரா அருணா.

Related posts