TamilSaaga

‘அவசர தேவைக்கு உடனடி விமான சேவை இல்லை’ : வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்!

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை முடிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர் அரசு, இந்தியாவிற்கு இன்னும் முழுமையாக தனது எல்லைகளை திறக்கவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.

இருப்பினும் இந்தியாவின் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் சிங்கப்பூர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சேவை கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் சேவை கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்தாலும் இறப்பு போன்ற சில மிக அவசர தேவைகளுக்கு சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்வதற்கு இன்றளவும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். உதாரணமாக சிங்கப்பூரில் வேலை செய்யும் ஒருவர், இந்தியாவில் உள்ள தனது நெருங்கிய உறவினரை இழக்கும் நிலையில், அவரால் உடனடியாக இந்தியா செல்ல முடியாது. வாரத்தில் சில நாட்கள் மட்டுமே இயங்கும் சிறப்பு விமானங்களுக்காக அவர் காத்திருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை, ஈ-பாஸ் என்று பல தரவுகளை அவர் தயார் செய்யவேண்டும். சிங்கப்பூர் மட்டும் இன்றி பிற நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் மக்களுக்கும் இதே நிலை தான்.

இந்நிலையில் மக்களின் இந்த சிரமநிலைக்கு, நாடு கடந்த பயணத்திற்கு மத்திய அரசு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் வெளியிடாதது ஒரு காரணமாக கூறப்படுகிறது. வாரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் மிக நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற பல அவசர தேவைகளுக்கு மக்கள் உடனடியாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்த வருகின்றனர்.

பல பயணமுகவர்களிடன் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுடைய அவசர தேவைக்காக இந்திய செல்ல வழி தேடி அலைந்து வருகின்றனர். ஆகவே, மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இறப்பு போன்ற சில அவசர தேவைகளுக்கு தாயகம் திரும்ப நினைப்பவர்களுக்கு விமான சேவை மற்றும் பிற சேவைகளில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, அவர்கள் தாயகம் திரும்ப சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் மற்றும் இந்திய தூதரகங்கள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இதற்கு துணை நிற்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts