TamilSaaga

தனிமைப்படுத்தல் வேண்டாம் – தடுப்பூசி போதும் : வெளிநாடுகளின் பயணிகளை வரவேற்கத் தயாராகும் சிங்கப்பூர்

கொரோனா தொற்றுநோயின் முதல் அலை , இரண்டாம் அலையின் தாக்கங்கள் குறைந்து, ஓரளவு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது உலகம். அதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளும், தடுப்பு நடவடிக்கைக்காக மூடி வைத்திருந்து தங்களது எல்லைகளை வெளிநாட்டு பயனாளிகளுக்கும், பயணிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விட ஆரம்பித்திருக்கின்றன .

அந்த வரிசையில் ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு மையமாக விளங்கக்கூடிய சிங்கப்பூரும் தனது ‘ VTL ‘ எனும் திட்டத்தின் வழி ஜெர்மன், புருணை நாடுகளைத் தொடர்ந்து வேறு பல நாடுகளின் பயணிகளையும் அனுமதிப்பது தொடர்பான துரித நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சிங்கப்பூர் போகக் காத்திருக்கும், தயாராகிக் கொண்டிருக்கும் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

VTL – Vaccinated Travel Lane
(தடுப்பூசி பயணப்பாதை திட்டம் )

இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வர விரும்பும் பயணிகள் எல்லாரும் மொத்தமாக தனிமைப்படுத்தப்படுவதற்கு பதிலாக , அவர்களுக்கு நான்கு Covid – 19 பாலிமரேஸ் தொடர் வினை சோதனை எனப்படும் PCR சோதனைகள் எடுக்கப்படும். தொற்று இருப்பதாக அறிய வந்தால் அந்த குறிப்பிட்ட பயணி மட்டுமே தனிமைப் படுத்தப்படுவார்.

இந்தத் திட்டம் முதன் முறையாக கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மன், புருணை நாடுகளின் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது .

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி ஜெர்மனியிலிருந்து 100 பயணிகளோடு தனிமைப்படுத்துதல் இல்லாத முதல் வெளிநாட்டு விமானத்தை அனுமதித்ததை தொடர்ந்து இதுவரை இந்த VTL திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் இல்லாமல் சிங்கப்பூர் அனுமதித்து இருக்கிறது.அதில் ஏறக்குறைய 900 பேர் இந்த PCR சோதனைக்கு முழுமையாக உட்படுத்தப்பட்டு, அதில் ஒரே ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அவர் தனிமைப்படுத்தப்பட்டு ,சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து அமைச்சகத்தின் 20 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் திருமிகு. மகேஸ்வரன் அவர்கள், இந்த VTL திட்டத்தை சில வாரங்களில், வேறு பல நாடுகளுக்கும் விரிவு படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக திங்களன்று ( நேற்று ) அறிவித்துள்ளார்.

மேலும் இந்த VTL முறைக்கு பல்வேறு நாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, அதனை பயன்படுத்தவும் ஆர்வம் காட்டியுள்ளனர் என்றும் இதுவரை 2500 பேர் இந்த VTL முறையை பயன்படுத்தி சிங்கப்பூர் வர விண்ணப்பித்து உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்,சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கும், ‘சர்வதேச மையம்’ எனப்படும் அளவுக்கான அதன் புகழுக்கும், நம்பிக்கை தன்மைக்கும், விமான போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பதையும் தங்கள் அரசு சிறப்பாக உணர்ந்து உள்ளதாக தெளிவுபடுத்தினார்.

அதைத்தொடர்ந்து இந்த VTL திட்டத்தின் கீழ் எந்தெந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக அனுமதி வழங்கப்படும் எனும் கேள்விக்கு ,அது அந்தந்த நாடுகளின் பொது சுகாதார செயல்பாட்டு முறைகள், covid-19 நிகழ்வுகள், தடுப்பூசி விகிதம், நாட்டில் நடைமுறையில் உள்ள ஆட்சி போன்றவைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார் .

இப்போதுள்ள விகிதத்தில் இந்த முறை தொடர்ந்து வெற்றி பெறும் பட்சத்தில், வெகு விரைவில் சிங்கப்பூர் எல்லா நாட்டு பயணிகளுக்கும் தனது கதவுகளை அகலத் திறக்கும் எனும் நம்பிக்கை சிங்கப்பூர் போக விரும்பும் வெளிநாட்டு பயணிகள் மத்தியில் இந்த அறிவிப்பின் வழியாக ஏற்பட்டுள்ளது.

Related posts