கோலாலம்பூரில் இருந்து சபாவின் தவாவ் நகருக்குச் சென்ற ஏர் ஏசியா விமானத்தில் பாம்பு ஒன்று சிக்கியிருந்ததால், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி நடுவானில் சென்று கொண்டிருந்தபோது பாதை மாற்றப்பட்டு குச்சிங்,சரவாக் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது மேல்நிலைப் பெட்டி ஒன்றில் பாம்பின் நிழல் காணப்பட்டது பலரையும் திடுக்கிட வைத்தது.
அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது tik tok கணக்கில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். விமானத்தின் கேப்டன் இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் விமானத்தை திருப்பி விட முடிவு செய்ததாக ஏர் ஏசியா தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயல் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிறுவனம் மேலும் கூறியது.
பின்னர் விமானம் அதே நாளில் குச்சிங்கிலிருந்து தவாவுக்கு புறப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் மிகவும் அரிதான சம்பவம் என்று கூறப்படுகிறது. இது அவ்வப்போது எந்த விமானத்திலும் நிகழலாம் என்று ஏர் ஏசியாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லியோங் டியென் லிங் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் அவர்களின் முன்னுரிமை என்று அவர் கூறினார். “எந்த நேரத்திலும் விருந்தினர்கள் அல்லது பணியாளர்களின் பாதுகாப்பு எந்த ஆபத்தான கட்டத்திற்கு செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.