TamilSaaga

பயணிகள் கவனத்திற்கு: நோன்புப் பெருநாளை முன்னிட்டு… MRT நேரத்தினை இரவு நீட்டிக்க சிங்கப்பூர் அரசு முடிவு!

சிங்கப்பூர், மார்ச் 26: நோன்புப் பெருநாளை (Ramzan 2025) முன்னிட்டு வரும் மார்ச் 30ஆம் தேதி (சனிக்கிழமை) குறிப்பிட்ட சில பேருந்து மற்றும் ரயில் சேவைகளின் இயக்க நேரம் நீட்டிக்கப்படும் என்று போக்குவரத்து நிறுவனங்களான எஸ்எம்ஆர்டி மற்றும் எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்துள்ளன.

எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய ரயில் பாதைகளில் சேவையாற்றும் ரயில்கள் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக 30 நிமிடங்கள் வரை இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

அதன்படி, வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ் மற்றும் துவாஸ் லிங்க் ஆகிய எம்ஆர்டி நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்திலிருந்து பின்னிரவு 12.30 மணிக்கு புறப்படும்.

வட்ட ரயில் பாதையில் ஹார்பர்ஃபிரண்ட் எம்ஆர்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் டோபி காட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும். அதேபோல், எதிர்த்திசையில் செல்லும் கடைசி ரயில் இரவு 11.30 மணிக்கு புறப்படும்.

மேலும், எஸ்எம்ஆர்டியின் 18 பேருந்து சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்து எண்கள் பின்வருமாறு: 300, 301, 302, 307, 983A, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A, 181, 240, 241, 243G, 974A.

இதனிடையே, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் அதன் டௌன்டவுன் மற்றும் வடக்கு – கிழக்கு ரயில் போக்குவரத்து சேவைகளின் நேரத்தையும், செங்காங் – பொங்கோல் இலகு ரயில் சேவை நேரத்தையும் நீட்டித்துள்ளது. கூடுதலாக, 17 பேருந்து சேவைகளின் இயக்க நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்து எண்கள்: 222, 225G, 228, 229, 410W, 114A, 60A, 63M, 325, 315, 291, 292, 293, 232, 238, 804, 812.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக இந்த நேர நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இரு போக்குவரத்து நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் மாற்றம் SBS அறிவிப்பு!!

Related posts