பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வலியின் காரணமாக ஓடும் ஆட்டோவில் குழந்தை பெற்ற சம்பவம், ஓடும் பேருந்தில் குழந்தை பெற்ற சம்பவம் போன்றவற்றை பல ஆண்டுகளுக்கு முன்னால் நாம் செய்திகளில் பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுது எல்லாம் அது போன்ற சம்பவம் எங்கும் நிகழ்வதில்லை. ஆனால் இதே போன்ற செய்தி தற்பொழுது சிங்கப்பூரில் நிகழ்ந்திருக்கின்றது.
பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக டாக்ஸி புக் செய்த பொழுது டாக்ஸியிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்த சுவாரசியமான சம்பவம் சிங்கப்பூரில் நடந்தேறி இருக்கின்றது. சிங்கப்பூரில் வாழும் நூர்ஜகான் எனப்படும் 30 வயது நிரம்பிய பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தைக்காக கருவுற்றிருந்த நிலையில் குழந்தைக்கான தேதி டிசம்பர் 13ஆம் தேதி என குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென டிசம்பர் 6ஆம் தேதி காலை அவருக்கு பிரசவ வலி லேசாக ஆரம்பிக்கவே குழந்தைகளை கணவருடன் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவர் கிராப் டாக்ஸியை புக் செய்திருந்தார்.
காலை 9 மணிக்கு டாக்ஸியில் ஏறிய அவர் மிக சிரமத்துடன் பயணத்தை மேற்கொண்டார். மருத்துவமனை நெருங்கும் வேளையில் பிரசவ வலி அதிகமாகவே காரிலேயே குழந்தை பிறக்கப்போவதை அவர் முன்னதாகவே கணித்து விட்டார். எனவே டிரைவரிடம் எனக்கு குழந்தை வெளியே வருகின்றது. அதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறிக்கொண்டு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.பயணம் முழுவதுமே கனிவுடன் நடந்து கொண்ட டிரைவர் மிக வேகமாக சென்று மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் நர்சினை உதவிக்கு அழைத்து வந்துள்ளார்.
மருத்துவர்களும் உடனே துரிதமாக செயல்பட்டு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதற்குப்பின் தரவேண்டிய முதலுதவி சிகிச்சையை தந்துள்ளனர். அதற்கு பின்னர் ஓட்டுநரை தேடும் பொழுது அவர் பெண்ணை இறக்கிவிட்டு மறு சவாரிக்கு சென்றது தெரியவந்தது. இந்நிலையில் ஓட்டுநரின் செயலை பாராட்டி அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளதாக நன்றி தெரிவித்துள்ளார் அந்த பெண். அதற்கு பிறகு டாக்ஸி நிறுவனத்தினை தொடர்ந்து கொண்டு பேசிய பெண் டிரைவரின் செயலை பாராட்டி அவருக்கு மிகவும் நன்றி தெரிவித்து மேலும் தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். ஓடும் டாக்ஸியில் பெண் குழந்தை பெற்றுள்ள சம்பவம் சிங்கப்பூரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.