இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பணபரிவர்த்தனை செய்ய இருநாட்டின் அதிவேக UPI மற்றும் PayNow இணைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், தங்கள் வீட்டினருக்கு பணம் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களைச் சந்தித்தே வருகிறார்கள். வங்கிகளுக்கு பணிபரிவர்த்தனைக்கு கட்டணமாக அனுப்பும் பணத்தில் 10% தொகையைக் கொடுக்க வேண்டியது கட்டாயமாக இருந்து வருகிறது. இதனால், சிங்கப்பூரில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் மிகப்பெரிய தொகையை சேவைக் கட்டணமாக இழந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், பணம் அனுப்ப நேரமும் அதிகமாக எடுத்து வருகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூரின் நாணய ஆணையம் பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்துள்ளனர் . அதன் ஒரு படியாக, UPI மற்றும் PayNow இணையவழி பணபரிமாற்ற அமைப்புகளை இணைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் பி குமரன் கூறுகையில், “PayNow மற்றும் UPI இணைக்கப்பட்டால் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவை இணைக்க முடியும். சிங்கப்பூர் வரும் இந்திய சுற்றுலாப்பயணிகளிடம் ரூபே கார்டு இருப்பதில்லை. அப்படி இருந்தாலும், அவர்கள் உள்நாட்டில் பயன்படுத்தக்கூடிய கார்டுகளையே வைத்திருக்கிறார்கள். இது சுற்றுலா பயணிகளுக்கு பிரச்சனையாக இருக்கிறது. இந்த இணைப்பின் மூலம் இனி வரும் காலங்களில், அதிக அளவிலான தொகையை கையில் வைத்திருக்கத் தேவை இல்லை. வெளிநாட்டு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது மிகப்பெரிய தொகையை சேவைக் கட்டணமாக கொடுக்க தேவையில்லை’’ என்றார்.
இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் முடிந்துவிடும். அதை தொடர்ந்து, UPI ஐடியை கொண்டு சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பணம் எளிதாக அனுப்ப முடியும். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் மொபைல் எண் மூலமே பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதன்மூலம் இந்தியர்கள், இதுவரை செலுத்திவந்த 10% சேவைக் கட்டணத்தை மிச்சப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை இருநாட்டு தரப்பில் இருந்து விரைவில் வெளியீடுவார்கள் என்று தெரிகிறது.