சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (MOM) அதிகாரிகள் ஜூரோங்கில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதியில், உடல்நல பராமரிப்பு நெறிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதைக் தற்போது கண்டறிந்துள்ளனர். பெருந்தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்த தொழிலாளர்களை அவர்களின் அறைகளிலிருந்து மீட்பு மையங்களுக்கு அனுப்புவதில் ஏற்படும் தாமதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நல பராமரிப்பு நெறிமுறைகளை மீறுதல் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காதது, அத்துடன் தரமான உணவு அளிக்காதது போன்ற கோரிக்கைகள் அங்கிருந்து எழுந்ததை அடுத்து, FAST எனப்படும் Forward Assurance and Support Team அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 13) ஜலான் துகாங்கில் உள்ள விடுதிக்கு வருகை தந்தனர்.
சிங்கப்பூர் போலீஸ் படையும் நண்பகல் 12.55 மணியளவில் விடுதியில் இருந்து உதவிக்கான அழைப்புக்கு பதிலளிக்கும் விதத்தில் அங்கு சென்றதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த MOM தெரிவித்தது. முன்னதாக, பிற்பகலில் பல ஆண்கள் விடுதிக்கு வெளியே திரண்டதாக செய்திகள் வெளிவந்தன. பெருந்தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்த தொழிலாளர்களை, அவர்களின் அறைகளிலிருந்து மீட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்புவதில் தாமதங்கள் இருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக MOM தெரிவித்தது.
இந்நிலையில் MOM வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது : “மேலும் மருத்துவ பராமரிப்பு தேவைப்படுபவர்களை சிகிச்சைக்காக பொருத்தமான சுகாதார வசதிகளுக்கு மாற்ற நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்தவர்களின் “அறை தோழர்கள் எதிர்மறை ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) முடிவை பெற்றவுடன் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்”
மேலும் தங்கள் உடல்நலம் குறித்து அறிய மருத்துவரைப் பார்க்க விரும்பும் விடுதி வாசிகள் தினமும் ஒரு பிராந்திய மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் மற்றும் அவர்களுக்கு டெலிமெடிசின் அணுகல் வழங்கப்பட்டது. மேலும் MOM, தொழிலாளர்களின் தேவைகளை கவனித்துக்கொள்ள மொபைல் கிளினிக் குழுக்களையும் நியமித்துள்ளது. அதேநேரத்தில் விடுதியில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் முதலாளிகளால் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து தொழிலாளர்களிடமிருந்து Feed Backகளை அந்தந்த முதலாளிகள் பெற்றுவருவதாக MOM தெரிவித்துள்ளது.
இறுதியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வை கவனித்துக்கொள்வதற்காக, தங்குமிட ஆபரேட்டர்கள் மற்றும் முதலாளிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று MOM தெரிவித்தது.