ஊரில் ஆடும், கோழியும் சாப்பிட்டு வளர்ந்த சிலருக்கு சிங்கப்பூர் சென்றால் சாப்பாட்டுக்கு என்ன செய்வோம் என்பதே பெரிய கவலையாக இருக்கும். அங்கு நம்ம ஊர் மாதிரி அரிசி சோறு கிடைக்குமா என்பதே பெரிய யோசனைகளும் இருக்கும். வெளிநாட்டில் என்ன சாப்பிடுவாங்க நம்ம பசங்க என சில பெற்றோர்களும் வருத்தப்படுவாங்க. இப்படி வருத்தப்படும் கூட்டத்தில் நீங்களும் இருந்தால் இது உங்களுக்காக தான்.
சிங்கப்பூரில் இருக்கும் போது அங்குள்ள தமிழக ஊழியர்களுக்கு பெரிதாக வித்தியாசத்தை உணரவே மாட்டார்கள். தமிழ் மொழி பேசுபவர்கள் அங்கு நிறைய வசிப்பதால் தமிழ்நாட்டு ஃபீல் தானாகவே வந்துவிடும். சரி அடுத்து சாப்பாடு தானே. இங்கு இருக்கும் ஊழியர்கள் இரண்டு வகையாக சாப்பிடலாம். முதலில் நீங்களே சமைத்து சாப்பிடுவது. இந்த முறையை ஒரு சிலரே செய்து வருகிறார்கள்.
சிங்கப்பூரில் இருக்கும் பெரும்பாலான தங்கும் விடுதிகள் ஏசி வைத்து கட்டப்பட்டுள்ளன. இந்த அறையில் சமைத்தால் அது பெரிய விபரீதத்தை உருவாக்கும். அதனால் அப்படி ஏசி இருக்கும் சில அறைகளில் சமைக்க கூடாது என்பதை கட்டுப்பாடாகவே கூறிவிடுவர்.
இதை தொடர்ந்து, கேண்ட்டீன்களில் ஆர்டர் செய்து சாப்பிடலாம். இது தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் மெஸ் முறை மாதிரி தான். தினமும் 3 வேளைக்கு சாப்பாடு வந்துவிடும் உங்கள் சம்பளம் வந்ததும் அதற்கு உரிய தொகையை கொடுத்து விடலாம்.
இதற்கு தினமும் $4 மட்டுமே கட்டணமாக வாங்கப்படுகிறது. மாதம் $120 டாலராக வாங்கப்படும். நடுவில் உணவை டெலிவரி செய்பவர்களுக்கு $10 பெறப்படும். இந்த உணவின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 6 ஆயிரமாக கணக்கிடப்படுகிறது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் மேற்பார்வையில் இந்த உணவுகள் தயாரிக்கப்படுவதால் உணவின் தரம் போதுமானதாக இருக்கும்.
என்ன சாப்பாடுகள் இருக்கும்?
தமிழ்நாட்டை போல தான் உணவுகள் இருக்கும். சாம்பார், தயிர், ரசம் என குழம்பு வகைகள். அரிசி உணவுடன் மதிய சாப்பாட்டிற்கு அசைவ உணவும் கொடுக்கப்படும். இதில், மீன் மற்றும் சிக்கன் அதிகமாக இடம்பெறும்.
காலை உணவாக தோசை, இட்லி, பரோட்டா ஆகியவைகளும் இருக்கும். சாதாரணமாக தமிழக மெஸ்களில் கிடைக்கும் அனைத்தும் சிங்கப்பூர் கேண்ட்டீன் உணவுகளில் கிடைக்கும்.
காலைக்கும், மதியத்திற்கும் ஒரே நேரத்தில் உணவு டெலிவரி செய்துவிடுவார்கள். இரவுக்கு மட்டும் மாலை நேரத்தில் உணவினை டெலிவரி செய்வார்கள். இதைப்போல தான் சிங்கப்பூர் உணவுமுறைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.