TamilSaaga

20 ஆயிரம் சம்பளம் என ஆசையாக சிங்கப்பூர் வந்த தமிழக பெண்ணை ஏமாற்றிய குடும்பம்… 18 மணிநேரம் வேலை வாங்கி பாதி சம்பளம் கொடுத்த அவலம்….

ஆண்பிள்ளைகளை போல பெண்களும் தற்போது தங்கள் குடும்பத்தினை காப்பாற்ற வெளிநாடுகளுக்கு பறந்து வருகின்றனர். இதில் சிங்கப்பூர் செல்லும் சில பெண்கள் படிக்காததால் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். கை நிறைய சம்பளம், 8 முதல் 12 மணி நேர வேலை தான் எனக் கூறி அழைத்து செல்லப்படும் சில பெண்களுக்கு சிங்கப்பூரில் பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

ஏஜெண்ட்களால் சிங்கப்பூர் வந்திறங்கும் பெண்களுக்கு சில நாட்கள் என்ன வேலை எப்படி இருக்க வேண்டும் என்ற பயிற்சி கொடுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து வேலை செய்ய இருக்கும் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்.இங்கு தான் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் துவங்குகிறது. இதுகுறித்து, ஒருவரின் உண்மை சம்பவத்தை கேட்டாலே நமக்கு இந்த சம்பவங்களின் ஆழம் புரியும்.

தமிழ்நாட்டினை சேர்ந்த ஒரு குக்கிராமத்தில் இருந்து சிங்கப்பூர் வந்தவர் அஞ்சுகம். இவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களின் படிப்பிற்காக சிங்கப்பூர் வந்திறங்கியவருக்கு முதலில் 20 ஆயிரம் சம்பளம் கூறப்பட்டது. தனி அறை, 10 மணி நேரம் என சொல்லப்பட்டதால் வீட்டு வேலை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையிலே தான் வீட்டு செய்யவேண்டிய வீட்டில் காலடி வைத்தார். ஆனால் அவரின் எதிர்பார்ப்புகள் சில நாட்களில் உடைத்தெறியப்பட்டது.

காலை 5 மணிக்கு துவங்கு ஓட்டம் நள்ளிரவை தாண்டியும் நீடிக்கும். தனி அறைக்கு பதில் கிட்சனின் ஒரு ஓரத்தில் தூங்க இடம் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக உழைத்தவருக்கு முதல் மாத சம்பளத்தினை கையில் வாங்கும் போது நெஞ்சே அடைத்துவிட்டது. சொல்லப்பட்ட 20 ஆயிரத்தில் பாதியாக அதாவது 10 ஆயிரத்திற்கு குறைவாகவே கொடுக்கப்பட்டது. இருந்தும் அவர் அதேவேளையை பார்க்க வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டார்.

வீட்டில் இருக்கும் அவரை மனிதராக கூட யாரும் பார்க்காமல் இருப்பது தான் பரிதாபத்தின் உச்சம். தொடர்ந்து அவரை வேலை வாங்கியவர்கள் ஒரு நாள் கூட அவருக்கு லீவ் என்பதே கொடுக்க மாட்டார்களாம். அருகருகில் வேறு வேலை செய்து வரும் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்க வேண்டும் என்றால் கூட மூன்று மாதத்திற்கு ஒருமுறை சில மணி நேரம் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பது தான் இதில் கூடுதல் கவலையை அவர்களுக்கு கொடுத்தது.

ஊருக்கு போக பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. இருந்த அதே வேளையை பார்த்தவருக்கு இரண்டு வருடத்தில் பெரிதாக சேமிப்புகளை கொடுக்கவில்லை என்றாலும் நிறைய மன கஷ்டங்களை கொடுத்ததாம். பெரிய அளவில் தங்கள் பிள்ளைகளை வளர்த்து விடலாம் என்ற கனவில் சிங்கப்பூர் சென்றவர் அங்கு செல்ல வாங்கிய கடனை அடைக்க மட்டுமே முடிந்ததாம். ஓரளவு உடல் ஆரோக்கியத்துடன் சென்றவருக்கு அதிலும் பிரச்சனை வந்ததாம். 40க்கும் மேல் இருக்கும் அவர் தொடர்ச்சியாக பல மணிநேரம் நின்றதால் மூட்டு வலி தான் மிச்சம் என்பதை கவலையுடன் கூறுகிறார்.

சிங்கப்பூர் பலருக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்து கொண்டிருப்பது சந்தேகத்திற்கே இடமில்லாத உண்மை என்றாலும், இங்கும் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதே நிதர்சனம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts