சிங்கப்பூர், மார்ச் 07, 2025: சிங்கப்பூரின் 60-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில், SG60 கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டிலுள்ள 23 சுற்றுலாத் தலங்களில் கட்டணக் கழிவுகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அறிவியல் நிலையம், பறவைகள் மகிழ்வனம், கிஸ்டோபியா, மண்டாய் வனவிலங்குக் காப்பகம், பவுன்ஸ் சாங்கி, ஸ்னோ சிட்டி, சிங்கப்பூர் கம்பிவண்டி, கரையோரப் பூந்தோட்டம் உள்ளிட்ட 23 சுற்றுலாத் தலங்களில் இந்தச் சலுகைகள் பொருந்தும். இதுகுறித்த அறிவிப்பை வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், மார்ச் 6 அன்று நடைபெற்ற வர்த்தக, தொழில் அமைச்சின் 2025-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது வெளியிட்டார்.
“உலக நாடுகளை சிங்கப்பூருடன் இணைப்பது நமது முக்கிய நோக்கம். இதன் மூலம் மக்கள் மற்றும் வர்த்தக வரவு தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். ஆசியாவில் உலக நாடுகளுக்கான மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்தி, நமது துடிப்புமிக்க நாட்டுக்கு உலக மக்களை ஈர்க்க வேண்டும்,” என்று திரு. டான் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம், 2025-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 17 மில்லியன் முதல் 18.5 மில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுப்பயணத் துறையில் சுமார் $29 பில்லியன் முதல் $30.5 பில்லியன் வரை வருவாய் கிடைக்கும் எனவும் திரு. டான் கணித்துள்ளார்.
SG60 கொண்டாட்டங்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தைக் கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் நடைபெற உள்ளன. உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகைகள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை சிங்கப்பூருக்கு வரவழைப்பதற்கான ஊக்கியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, 2024-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 16.5 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றது. மேலும், ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுப்பயண வருவாய் $22.4 பில்லியனை எட்டியது, இது வரலாற்றில் ஒரு புதிய உச்சமாகும். இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து, SG60 திட்டங்கள் 2025-ஐ மேலும் வெற்றிகரமான ஆண்டாக மாறும்.