சிங்கப்பூர் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மே 13, 2025 முதல் அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களும் $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (CDC Vouchers) பற்றுச்சீட்டுகளைப் பெற உள்ளன. இந்தப் பற்றுச்சீட்டுகள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை எளிதாக்குவதற்காக வழங்கப்படுகின்றன என்று நிதி அமைச்சும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் ஏப்ரல் 15, 2025 அன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்த $500 பற்றுச்சீட்டுகளில் $250 மதிப்புள்ளவை பேரங்காடிகளில் பயன்படுத்தப்படலாம். மீதமுள்ள $250 தொகையை குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளிலும், இத்திட்டத்தில் பங்கேற்கும் உணவு அங்காடி நிலையக் கடைகளிலும் செலவிடலாம். இந்தப் பற்றுச்சீட்டுகள் 2025 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
சிடிசி பற்றுச்சீட்டு திட்டம் ஏழாவது முறையாக அமல்படுத்தப்படுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 2025ல் நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் இதுகுறித்து அறிவித்திருந்தார். மேலும், 2026 ஜனவரியில் கூடுதலாக $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பற்றுச்சீட்டு திட்டம் முதலில் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரர்களின் ஒற்றுமையைப் பாராட்டும் வகையிலும், உள்ளூர் வர்த்தகங்களுக்கு உதவும் நோக்கத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 2025ல் வழங்கப்பட்ட $300 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளை 1.33 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களில் சுமார் 90% குடும்பங்கள் பதிவிறக்கம் செய்துள்ளன. இவற்றில் இதுவரை $300 மில்லியன் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார். இந்தப் பற்றுச்சீட்டுகளையும் 2025 டிசம்பர் 31 வரை பயன்படுத்தலாம்.
பற்றுச்சீட்டுகளைப் பெறுவதற்கு முன் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிதி அமைச்சும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் அறிவுறுத்தியுள்ளன. பற்றுச்சீட்டு பதிவிறக்கத்தின் போது வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்படாது, பணம் செலுத்தவோ அல்லது அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கவோ கேட்கப்படாது. ஏதேனும் சந்தேகம் எழுந்தால், ஸ்கேம்ஷீல்டு அவசர எண்ணான 1799 மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பற்றுச்சீட்டு திட்டம் சிங்கப்பூரர்களுக்கு பொருளாதார நிவாரணம் அளிப்பதோடு, உள்ளூர் வர்த்தகங்களையும் ஊக்குவிக்கும்