TamilSaaga

“இனி தனிமைப்படுத்துதல் இல்லை” : நவம்பர் 29 முதல் VTL சேவை மூலம் இந்தியர்கள் சிங்கப்பூர் வரலாம் – முழு விவரம்

ஏற்கனவே நமது சிங்கப்பூர் அரசு பல நாடுகளில் இருந்து மக்களை இங்கு வருவதற்கு தனிமைப்படுத்துதல் இல்லாத VTL என்ற சேவையை அளித்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே 15கும் அதிகமான நாடுகளுக்கு VTL சேவை இருந்து வரும் நிலையில் தற்போது சிங்கப்பூர் அதன் தடுப்பூசி பயணப் பாதை (VTL) திட்டத்தை நவம்பர் 29 முதல் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று திங்கள்கிழமை (நவம்பர் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் 29 முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடன் VTL களையும், டிசம்பர் 6 முதல் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றுடன் VTL களை அறிமுகப்படுத்த சிங்கப்பூர் ஆவணம் செய்துள்ளது. இன்று திங்களன்று பெருந்தொற்று பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூரும் இந்தியாவும் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரமாக அங்கீகரிப்பது குறித்து விவாதித்து வருவதாகக் கூறினார்.

கடந்த நவம்பர் 12 முதல், சிங்கப்பூர் வழங்கிய தடுப்பூசி சான்றிதழ்களை இந்தியா அங்கீகரிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இனி வருகைக்குப் பிறகு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை, அவர்கள் வந்தவுடன் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டால் போதும்” என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

“இந்தியாவுடன் திட்டமிடப்பட்ட வணிகப் பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். அதேபோல இன்றைய தேதியில் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரே விமான சேவை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா விமானங்கள் தான்” என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்தியாவுடனான எங்கள் கலந்துரையாடல்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் சென்னை, டெல்லி மற்றும் மும்பைக்கு தலா இரண்டு தினசரி VTL விமானங்களை நவம்பர் 29 ஆம் தேதிக்குள் மீண்டும் தொடங்க இலக்கு வைத்துள்ளோம். சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) இதை இறுதி செய்து கூடுதல் விவரங்களை வழங்கும்.” என்றார்.

Related posts