சிங்கப்பூரில் நான்கு வயது சிறுமி மேகன் கங் அடித்துத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில், சிறுமியின் தாய்க்கு 19 ஆண்டு சிறைத் தண்டனையும், அந்தப் பெண்ணின் காதலருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 3) இந்த தீர்ப்பை வழங்கியது.
சிறுமி மேகன் கங் (வயது 4) தாய் ஃபூ லி பிங் (வயது 29) மற்றும் அவரது காதலரான வோங் ஷி ஸியாங் (வயது 38) ஆகியோரால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளார். இந்த கொடுஞ்செயல்கள் அனைத்தும் காணொளியில் பதிவாகியுள்ளன.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, சிறுமி மேகன் படுக்கையிலோ அல்லது இருக்கையிலோ சிறுநீர் கழித்தால், தாய் ஃபூ லி பிங்கும் காதலன் வோங் ஷி ஸியாங்கும் மாறி மாறி அவரை அடித்துள்ளனர். சில சமயங்களில் சிறுமியை உதைத்துள்ளனர். அவர்கள் வசித்து வந்த பாய லேபார் பகுதியில் உள்ள வாடகை கொண்டோமினியத்தின் தாழ்வாரத்திலேயே சிறுமி மேகனை உறங்க வைத்துள்ளனர். மேலும், சிறுமிக்கு போதுமான உணவோ அல்லது அணிந்துகொள்ள உரிய உடைகளோ வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, சிறுமி மலம் கழித்ததை தாயிடம் தெரிவிக்கவில்லை என்பதற்காக, மலம் நிறைந்த டயப்பரைக் கழற்றி அவரது தலையில் வைத்துள்ளனர். குப்பைத்தொட்டியில் இருந்த உணவை உண்ணுமாறும் சிறுமியை அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த கொடுமைகள் ஓராண்டு காலத்திற்கு மேலாக நீடித்து வந்துள்ளன.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, காதலன் வோங் ஷி ஸியாங் சிறுமியின் வயிற்றில் உதைத்துள்ளார். அதே நாளில், உடல் மற்றும் மன ரீதியிலான கொடுமைகள் உச்சக்கட்டத்தை எட்டியதில் சிறுமி மேகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி இறந்த பிறகு, அவரது உடலை எவ்வித ஆதாரமும் இன்றி மறைப்பது குறித்து இருவரும் ஆலோசனை செய்துள்ளனர். இறுதியில், 2020 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி உலோக பீப்பாய் ஒன்றில் சிறுமியின் உடலை எரித்துள்ளனர். இதுவரை சிறுமியின் எரித்த சாம்பல் மீட்கப்படவில்லை.
தாயார் ஃபூ லி பிங், குழந்தைக் கொடுமை, சிறுமியின் மரணத்திற்கு அனுமதி அளித்தது மற்றும் விசாரணையில் இருந்து தப்பிக்க சிறுமியின் உடலை வேண்டுமென்றே அப்புறப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஒப்புக்கொண்டார். உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது அவர் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.
அவரது காதலரான வோங் ஷி ஸியாங்கிற்கு மரணத்தை விளைவிக்கும் குற்றம் புரிதல், வேண்டுமென்றே சடலத்தை அப்புறப்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகிய குற்றங்களுக்காக 30 ஆண்டு சிறைத் தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.