மலேசியவின் ஈப்போ என்ற நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த இரட்டை அடுக்கு சுற்றுலாப் பேருந்து ஒன்று நேற்று வியாழக்கிழமை (ஜூலை 21) நள்ளிரவு 12.05 மணியளவில் கோலாலம்பூர் அருகே விபத்துக்குள்ளானதில் 19 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் அளித்த தகவலின்படி, அந்த சுற்றுலா பேருந்தில் பயணித்த 24 பயணிகளில் ஒரு ஆறு வயது சிறுமி மட்டுமே நமது சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் என்றும், அந்த சிறுமிக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதில் பயணித்த மற்ற அனைவரும் மலேசியர்கள் என்றும் கூறப்படுகிறது, கோலாலம்பூரில் உள்ள Jalan Damansara என்ற இடத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அது கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.
மலேசிய குடிமைத் தற்காப்புப் படை இதுகுறித்து வியாழன் அன்று நள்ளிரவு 12.40 மணியளவில் விபத்து நடந்தாக ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. மேலும் அதன் பணியாளர்கள், KLல் உள்ள தீயணைப்பு நிலையத்தின் சக பணியாளர்களுடன், காயமடைந்த பயணிகளை கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றும் கூறியது.
மலேசிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளியில் பேருந்து அதன் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் அதன் பக்கவாட்டில் கவிழ்ந்து இருப்பதைக் காட்டியது. உள்ளே சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் கண்ணாடியை உடைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.