TamilSaaga

புதுக்கோட்டை மாப்பிள்ளைக்காக சிங்கப்பூரிலிருந்து பறந்து வந்த முதலாளி… தொழிலாளி படித்த அரசு பள்ளிக்குச் சென்று 4 லட்சம் நிதி அளித்து சிலிர்க்க வைத்த சம்பவம்!

சிங்கப்பூரில் பல வருடங்களாக பணி செய்யும் ஊழியர்களின் திருமணத்திற்கு, அவர்களின் முதலாளி சிங்கப்பூரிலிருந்து வருகை தரும் செய்தியினை நாமே பலமுறை பதிவிட்டு இருக்கின்றோம். ஆனால் தன் தொழிலாளியின் திருமணத்திற்கு வந்ததோடல்லாமல், அவர் படித்த பள்ளிக்கு நாலு லட்சம் மதிப்பிலான பொருட்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றார் சிங்கப்பூர் முதலாளி. புதுக்கோட்டையில் உள்ள அம்மங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் சிங்கப்பூரில் ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார்.

அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த அன்புக்கனி என்ற பெண்ணிற்கும் செப்டம்பர் 4ஆம் தேதி திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்திற்கு அவரது முதலாளி டொமினிக் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து சிறப்பித்து இருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றனர். திருமணத்திற்கு வந்ததோடு அல்லாமல் அவரது ஊழியர் படித்த அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு லேப்டாப், ப்ரொஜெக்டர் மேலும் மாணவர்களுக்கு தேவையான பல பொருட்களை வழங்கி பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் அப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்த ஊரையே ஒரு கலக்கு கலக்கியுள்ளனர். சிங்கப்பூர் முதலாளியின் செயலை கண்ட ஊர் மக்கள் அனைவரும், வெகுவாக பாராட்டி வருகின்றனர்.நம்மூரில், நன்றாக சம்பாதிப்பவர்களே பள்ளிகளுக்கு நன்கொடை அளிக்க தயங்கும் காலத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த நபர் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அந்த ஊரின் பள்ளிக்கு செய்த நற்செயல் அந்த ஊர் மக்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றது.

Related posts