சர்வதேச பயணத்திற்கு சீனா இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க துணைப் பங்காற்றியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் இந்தியாவின் தென் பகுதிக்கு அதிக விமானங்களை இயக்குவது மட்டுமல்லாமல் சில சிறந்த சலுகைகளையும் வழங்குகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தியாவிற்கும் செல்லும் விமானங்களைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தென்னிந்தியாவில் உள்ள சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய மூன்று நகரங்களில் இருந்து கூடுதல் சேவைகளை சமீபத்தில் அறிவித்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தற்போது கொச்சிக்கு தினசரி சேவையை இயக்குகிறது மற்றும் அந்த சேவை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினசரி இரண்டு விமானங்கள் என்று அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னைக்கான விமானங்களை வாரத்திற்கு 10 முறையிலிருந்து 17 வாராந்திர விமானங்களாக உயர்த்தும். ஹைதராபாத்தின் தற்போதைய தினசரி ஒருமுறை அட்டவணையும் செப்டம்பர் 1 முதல் 11 வாராந்திர விமானங்களாக அதிகரிக்க உள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தியா மீதும் இந்திய பயணிகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளது, ஏனெனில் இந்திய நாட்டிலிருந்து வரும் பயணிகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் பயணம் செய்வதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள், SIA இந்தியாவில் உள்ள 8 நகரங்களில் இருந்து 80 விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.