TamilSaaga

“தோனி முதல் சிவகார்த்திகேயன் வரை” அணியும் ‘Balmain’ பிராண்ட் டிரஸ்… அப்படி என்னதான் இந்த டிரஸ்-ல இருக்கு? சிங்கப்பூரில் தலைசுற்ற வைக்கும் விலை!

உலக அளவில் பிரபலமான ‘Balmain’ நிறுவனத்தின் பேஷன் தயாரிப்புகளைப் பற்றித் தெரியுமா?… பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான், ரன்பீர் கபூர் தொடங்கி கோலிவுட்டில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் வரைக்கும் ஃபேவரைட்டாக இருக்கும் பால்மெயின் பிராண்டோட வரலாறைத் தான் பார்க்கப்போகிறோம்.

`Balmain Fashion House’

’Balmain’ நிறுவனத்தோட தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருக்கிறது. 1945-ம் ஆண்டு ’Pierre Balmain’ என்பவரால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். பாரிஸில் 1914-ம் ஆண்டு பிறந்த ‘Balmain’, 1933-34 காலகட்டத்தில் பிரான்ஸின் புகழ்பெற்ற ‘École des Beaux-Arts’ நிறுவனத்தில் இணைந்து கட்டடக் கலை பயில்வதற்கான படிப்பை மேற்கொண்டார். ஆனால், தனது இளமைக் காலத்தின் பெரும்பான்மையான நாட்களை ஆடைகள் வடிவமைப்பதிலேயே செலவிட நேர்ந்தது.

அவரது குடும்பமும் ஆடை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்ததால், இயல்பிலேயே அவருக்கு அந்தத் திறமை கைவரப்பெற்றது. 1930-களில் பிரெஞ்சு விமானப் படையில் சேர்ந்து பணியாற்றினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமைதி திரும்பிய நிலையில், அந்தப் பணியில் இருந்து விலகினார். பின்னர், 1945-ல் ’Balmain’ என்ற தனது பேஷன் நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது பிரத்யேக டிசைன்கள் மக்களிடம் வரவேற்பைப் பெறவே ஒரு கட்டத்தில் ’king of French fashion’ என்று புகழப்பெற்றார்.

அந்த காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்த நடிகைகளான ‘Ava Gardner’ மற்றும் ‘Brigitte Bardot’ மட்டுமல்ல, தாய்லாந்து ராணி ’Queen Sirikit’ என பல பிரபலங்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கும் பிரத்யேக பேஷன் டிசனராக பால்மெயின் தான் இருந்தார். தொடர்ச்சியாக புகழ்பெறத் தொடங்கிய பால்மெயின் நிறுவன தயாரிப்புகள் ஹாலிவுட் நடிகர்கள் வரை பெயர் பெற்றது. நட்சத்திரங்கள் பலரின் பெர்சனல் டிரெஸ் கலெக்‌ஷன்களை அலங்கரிக்கத் தொடங்கியது.

75 ஆண்டுகளுக்கு மேலாக பேஷன் துறையில் கோலோச்சி வரும் பால்மெயின் நிறுவனத்துக்கு பாரிஸ் தவிர நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சலிஸ், லாஸ் வேகாஸ், மயாமி தொடங்கி சிங்கப்பூர் வரையில் 16-க்கும் மேற்பட்ட நகரங்களில் எக்ஸ்குளூசிவ் ஸ்டோர்கள் சொந்தமாக இருக்கின்றன. இந்தியாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் தொடங்கி கோலிவுட்டில் சிவகார்த்திகேயன், இயக்குநர் விக்னேஷ் சிவன் என பால்மெயின் டீஷர்ட் லவ்வர்கள் அதிகம். டோலிவுட்டின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன், பால்மெயின் கறுப்பு நிற டீஷர்ட் கலெக்‌ஷனையே வைத்திருக்கிறாராம். இந்தியாவில் இதன் குறைந்தபட்ச விலையே ரூ.22,000. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்திருந்த பால்மெயின் கறுப்பு டீஷர்ட்டின் விலை ரூ.44,000 ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள்.

மேலும் படிக்க – தகதகவென எரிந்த இரண்டாம் உலகப்போர்.. நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய சிங்கப்பூர் “ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்” – மிரண்டு போய் பின்வாங்கிய ஜப்பான்

சிங்கப்பூர் பால்மெயின் ஸ்டோர்

உலகின் முக்கியமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பால்மெயின் நிறுவனம், தனது எக்ஸ்குளூசிவ் ஸ்டோரைக் கடந்த 2017-ல் தொடங்கியது. ‘Marina Bay Sands’ இல் இருக்கும் மற்ற ஆடம்பர பேஷன் பிராண்ட் ஸ்டோர்களுடன் ‘The Shoppes’ இல் பால்மெயின் தனது எக்ஸ்குளூசிவ் ஸ்டோரைத் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவில் அந்த நிறுவனத்தின் முதல் எக்ஸ்குளூசிவ் ஸ்டோர் இதுவே. பாரிஸில் இருக்கும் பாரம்பரிய பால்மெயின் ஸ்டோரைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டோரின் டிசைன் தனித்துவமானது. வெள்ளை நிற சுவர்களில் பிரெஞ்சு கட்டடக் கலையில் இடம்பெற்றிருக்கும் டிசைன்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கதவுகள், சுவர்கள் மட்டுமல்ல இந்த ஸ்டோரின் ‘Ceiling’ டிசனுமே சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கும். இருபதாம் நூற்றாண்டு பிரெஞ்சு கட்டடக் கலையை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்டோருக்குள் நுழைந்தால், அதன் வடிவமைப்பில் அசந்துபோவீர்கள். டிரையல் ரூமில் இருக்கும் ஆளுயரக் கண்ணாடிகள் தொடங்கி 1940-களில் இருந்த பிரெஞ்சு பர்னிச்சர் வரையில் கடையின் அட்ராக்டிவ் அம்சங்கள் ஏராளம். கடைக்குள் உங்களால் ஒரு நாளுக்கான ஷாப்பிங் அனுபவத்தைப் பெறலாம்.

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி அவ்வளவு கலெக்‌ஷன்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆடைகள் மட்டுமல்லாது, ஷூ, சிக்னேச்சர் பேக்குகள், மற்ற பேஷன் கலெக்‌ஷன்களை வாங்கலாம். பால்மெயின் பேஷன்களின் முக்கியமான கவன ஈர்ப்பே கறுப்பு நிற ஆடைகள்தான். கறுப்பு நிறத்தில் இத்தனை டிசைன்களில் டீஷர்ட்டுகள், பெண்களுக்கான ஆடைகள் வேறொரு நிறுவனத்தில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

சிங்கபூரில் இந்த பால்மெயின் ஸ்டோரைத் தவிர ஆன்லைனிலும் ஆடைகளை நீங்கள் வாங்க முடியும். என்ன ஒன்று, மற்ற பேஷன் தயாரிப்புகளை விட இதன் விலை ரொம்பவே அதிகம். பால்மெயினில் ஒரு டீஷர்ட் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் குறைந்தபட்சம் 160 சிங் டாலர்களை நீங்கள் செலவழிக்க வேண்டி வரும்.

சிங்கப்பூர் ஸ்டோரின் முகவரி – ‘Balmain, #B1-11, The Shoppes at Marina Bay Sands, 2 Bayfront Avenue, Singapore 018972’, தொடர்பு எண் – 6688 7160’. இந்தக் கடை ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் காலை 10.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் திறந்திருக்கும். மேலும், வெள்ளி – சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஷாப்பிங் செய்யலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts